57-வது படம்
அஜித்குமார் நடித்த ‘வேதாளம்’ படம் கடந்த 2015-ம் வருடம் நவம்பர் மாதம் திரைக்கு வந்து பரபரப்பாக ஓடியது. ரூ.61 கோடி செலவில் தயாரான அந்த படம் ரூ.125 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்பட்டது. சிவா இயக்கி இருந்தார். இவர் ஏற்கனவே அஜித்குமாரை வைத்து இயக்கிய ‘வீரம்’ படமும் நல்ல லாபம் பார்த்தது. இதனால், இவர்கள் கூட்டணியில் 3-வது படமும் தற்போது தயாராகி வருகிறது.
இது அஜித்குமாருக்கு 57-வது படம் ஆகும். கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். கமல்ஹாசன் மகள் அக்ஷராஹாசன், இந்தி நடிகர் விவேக் ஓபராய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு பல்கேரியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் விறுவிறுப்பாக நடந்தது. ஐதராபாத்திலும் முக்கிய காட்சிகளை படமாக்கினர்.
இறுதி கட்ட படப்பிடிப்பு
இந்த படத்துக்கு பெயர் சூட்டாமலேயே 80 சதவீதம் படப்பிடிப்பை முடித்து விட்டனர். கதை மற்றும் அஜித் குமாரின் தோற்றம் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில், நேற்று அதிகாலை படத்தின் பெயர், ‘விவேகம்’ என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அஜித் குமாரின் முதல் தோற்றத்தையும் சமூக வலைத்தளத்தில் படக்குழுவினர் வெளியிட்டனர்.
அஜித்குமார் ‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டில் இருந்தார். வீரம், வேதாளம் பெயர்களைப்போல் ‘வி’ என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும் தலைப்பு தனக்கு ராசியாக இருப்பதாக டைரக்டர் சிவா கருதுகிறார். எனவேதான் ‘விவேகம்’ தலைப்பை தேர்வு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
2 தலைப்புகள்
ஏற்கனவே வதம், வியூகம் என்ற தலைப்புகள் இந்த படத்துக்கு பரிசீலிக்கப்பட்டன. ஆனால் அந்த பெயர்களை வேறு தயாரிப்பாளர்கள் பதிவு செய்து இருந்ததால் அவை கைவிடப்பட்டன. ‘விவேகம்’ படத்துக்கு இசையமைத்து வரும் அனிருத், “தமிழில் இது ஒரு ஜேம்ஸ்பாண்ட் படம்” என்று கூறி இருக்கிறார். இதனால் ரசிகர்கள் மத்தியில் படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. மே மாதம் இந்த படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.