படப்பிடிப்பில் கலந்து கொள்வதைத் தவிர, மற்ற நேரங்களில் சினிமாவில் இருந்து விலகியே இருக்கிறார். ரசிகர் மன்றத்தைக் கலைத்து வருடங்கள் ஆகின்றன. ஆனாலும் ஒருமுறையாவது பார்த்து விடமாட்டோமா என்று காத்திருக்கிறது ரசிகர் படை.
‘உங்களுக்கு இருக்கிற இந்த ரசிகர் பலத்தை அப்படியே அரசியலுக்கு மடை மாற்றலாமே’ – பலரும் பல சமயங்களில் யோசனை சொன்னபோதெல்லாம், ‘இது ரசிகர்களின் அன்பு. மகிழ்விக்கிறது, மரியாதையா நடத்துறதைத்தவிர அவங்களுக்கு என்னால் வேறென்ன திருப்பி செஞ்சிட முடியும்?’ என்பார். இந்த அன்புதான் அஜித்தின் பலம்.
அதனால்தான் ‘விசுவாசம்’ படப்பிடிப்பை நேரில் காண பேருந்துகள் எடுத்துக்கொண்டு, கூட்டம் கூட்டமாக ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கே சென்று குவிந்திருக்கிறார்கள் ரசிகர்கள். அஜித்தின் புதிய கெட்டப் ரகசியம் காப்பதால், ‘படப்பிடிப்பு பாதிக்கும். யாருக்கும் அனுமதியில்லை’ என்று திருப்பி அனுப்பினாலும் ரசிகர்களின் வருகை குறையவே இல்லையாம்.
‘விசுவாசம்’ படப்பிடிப்பு எந்தளவில் இருக்கிறது. இதில் அஜித் என்னமாதிரியான தோற்றத்தில் வருகிறார் என்பது குறித்து அந்தப் படக்குழுவில் உள்ள சிலரிடம் பேசினோம். அவர்கள் சொன்ன தகவல்களில் இருந்து…
* இதில் அஜித்துக்கு இரண்டு கெட்டப்கள். ஒரு கெட்டப்பில் தர லோக்கலாக வருகிறாராம்.
* ஒரு கெட்டப்புக்கான படப்பிடிப்பு மட்டும் ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் ஒரே ஷெட்யூலாக 30 நாள்கள் முடிந்துள்ளது. அதில் நயன்தாரா, தம்பி ராமையா, யோகிபாபு, ரோபோ ஷங்கர், மதுமிதா, ரமேஷ் திலக் ஆகியோர் அஜித்துடன் படப்பிடிப்பில் கலந்துகொண்டனர். அடுத்த கெட்டப்புக்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்குமாம்!
* இந்தப் படத்துக்காக நயன்தாராவை அணுகியபோது, கதை, சம்பளம் பற்றிக்கூட பேசவில்லையாம். ‘நான் பண்றேன். தேதி பிரச்னை இல்லை. மற்ற படங்களை அட்ஜெஸ்ட் பண்ணிட்டாவது இந்தப் படம் பண்ணுவேன்’ என்று கமிட் ஆனாராம். காரணம் அஜித் மீதான மரியாதை.
* மூன்றாவது முறையாக இயக்குநர் சிவா ‘விவேகம்’ படத்துக்காக அஜித்துடன் இணைந்தார். அந்தப்படம் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. அதனால் சிவாவை சமூக வலைதளங்களில் கண்டபடி கலாய்த்தனர். ஆனால் அந்தக் கலாய்ப்புகள் எதுவும் இந்த காம்போவின் பிணைப்பைப் பாதிக்கவில்லை. ‘கடந்த எட்டு ஆண்டுகளாக என்னுடனேயே உழைத்துக் கொண்டி ருப்பவர். அவருக்கு சினிமா வைத்தவிர வேறு சிந்தனையில்லை’ இது சிவாவைப் பற்றிய அஜித்தின் எண்ணம். அந்தளவுக்கு சிவா மீது அஜித் நம்பிக்கை வைத்திருக்கிறார்.
* தயாரிப்புத் தரப்பில் அஜித்தைக் கொண்டாடுகிறார்கள். தன்னால் படப்பிடிப்பு தடைபடக்கூடாது என்று நினைத்து, உடல்நிலை சரியில்லாத சமயங்களில்கூட மிகச்சரியாக ஷூட்டிங் வந்துவிடுவாராம். ஒரு சோறு பதமாக ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் சொல்கிறது தயாரிப்பு தரப்பு. “ராஜமுந்திரி, பிறகு ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி. இதுதான் ஷூட்டிங் பிளான். அதற்கேற்றாற்போல் இரண்டு இடங்களிலும் அஜித் சாருக்காக ஹோட்டல் அறை முன்பதிவு செய்து இருந்தோம். சில காரணங்களால் ராஜமுந்திரியில் எடுக்கவேண்டிய காட்சிகளையும் ஹைதராபாத்திலேயே எடுக்கலாம் என்று முடிவானது. அதற்காக ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் பெர்மிஷன் வாங்கி விட்டோம். ஆனால் அஜித் சாருக்காக புக் செய்யப்பட்டிருந்த அறைக்கான காலத்தை நீட்டிக்க முடியவில்லை. காரணம், அதே அறை பாலிவுட் பட ஷூட்டிங்குக்காக ரன்வீர் சிங்குக்காக முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. இதை அஜித் சாரிடம் சொன்னோம். ‘இதிலென்ன தர்மசங்கடம். எனக்கு ஒரு சின்ன அறையும் ஒரே ஒரு ஃபேனும் போதும்’ என்று கூறி அடுத்த நிமிடமே அறையைக் காலிசெய்தார்.
* இன்று ஆளாளுக்கு ஸ்மார்ட் போன் வைத்துள்ள சூழலில் அஜித் சாதாரண கேமராகூட இல்லாத மிகச்சிறிய, பேசிக் மாடல் மொபைல் போனைத்தான் பயன்படுத்துகிறாராம். ‘சார் உங்க முன் ஐபோன் எடுத்துப் பேசவே கூச்சமா இருக்கு’ என்று ஒருமுறை சொன்ன தயாரிப்பு நிர்வாகியிடம், ‘அதைப் பயன்படுத்தவேண்டிய அவசியமும் தேவையும் உங்களுக்கு இருக்கு. ஆனால் வீட்ல இருந்து பேசுறவங்ககிட்ட பேசுறதுக்கு இந்த போன் போதுமே. அதுமட்டுமில்லாம நான் வாட்ஸ்அப் பயன்படுத்துறதும் இல்லை. இது எனக்குப் போதும்’ என்றாராம்.
* முதலில் பைக், பிறகு கார் ஓட்டுவது என ஒவ்வொரு காலகட்டத்திலும் அஜித்தின் பொழுதுபோக்கு மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. தற்போது அஜித் தன் ரிலாக்ஸ் பொழுதுகளை துப்பாக்கி சுடுதல் மூலம் கழிக்கிறார். மாலை ஷூட்டிங் முடிந்து பேக்கப் ஆகிவிட்டால் அடுத்து டுமில் டுமில்தான்!
Published on Vikadan weekly Magazine dated June 20 , 2018 .