சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அஜித், நயன்தாரா நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு 40 சதவீதம் நிறைவுபெற்றுள்ள நிலையில், வரும் வாரத்தில் இருந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு சூடு பிடிக்க உள்ளது.
தீபாவளி ரிலீஸ் என்ற அறிவிப்போடு தொடங்கப்பட்ட இப்படத்தை, தற்போது பொங்கல் ரிலீஸ் என படக்குழு உறுதி செய்துள்ளது. அதன் முதல்கட்டமாக விரைவில் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டுக்கான வேலைகளில் இறங்கியுள்ளனர்.
கலகலப்பு, காமெடி, ஆக்சன் கலவையாக தேனி, மதுரை பின்னணியில் மிடில் டவுன் சார்ந்த வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் ‘விசுவாசம்’ படத்தில் அஜித் பிரம்மாண்டமான பைக் ஒன்றை பயன்படுத்துகிறார். இந்த பைக்கை, அவரது ரசிகர்கள் கொண்டாடும்விதமாக பெரும் பொருட்செலவில் பிரத்தியேக வடிவமைப்பில் உருவாக்கியுள்ளனர். பைக் ரேஸரான அஜித்தை அவரது ரசிகர்கள் இப்படத்தில் வெகுவாக ரசிப்பார்கள் என்ற நோக்கத்தில், யாரும் முன்கூட்டியே அந்த பைக்கை பார்த்துவிடக்கூடாது என ரகசியமாக படப்பிடிப்பு தளத்துக்குக் கொண்டு வந்து படமாக்கி வருகிறார்கள்.
இதுவரை ஹைதராபாத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் முக்கிய காட்சிகளுக்கு இடையே அஜித் – நயன்தாரா உள்ளிட்ட குழுவினர்கள் கலந்துகொள்ளும் 2 பாடல்களையும் படமாக்கியுள்ளனர். படத்தில் இடம்பெறும் அனைத்து பாடல்களின் இறுதிக்கட்ட மிக்ஸிங் அமெரிக்காவில் நடக்கின்றன. பாடல்களுக்கு இணையாக சண்டைக் காட்சிகளும் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட உள்ளன. ஒவ்வொரு பாடலுக்கும், சண்டைக் காட்சிக்கும் பல கோடி ரூபாய் செலவு செய்கிறார்கள். குறிப்பாக ரூ. 5 கோடிக்கும் மேலான பொருட்செலவில் கிளைமாக்ஸ் காட்சியை உருவாக்கும் வேலையை இப்போது முதல் படக்குழு திட்டமிட்டு வருகிறது.
கிராமத்துக் காட்சிகள்
ரசிகர்கள் கூட்டம் காரணமாக தேனி, மதுரை பின்னணி பகுதிகளை அங்கேயே சென்று படமாக்க முடியாத சூழல் இருக்கிறது. அதனால் ஹைதராபாத்தை தொடர்ந்து கிராமத்து காட்சிகளுக்கான ஒடிசா, புனே, பஞ்சாப் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று படமாக்க உள்ளனர்.
காமெடி காட்சிகளில் யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா உள்ளிட்டோர் ஏற்கெனவே நடித்து வரும் நிலையில், தற்போது விவேக் கோவை சரளா இருவரும் இணைந்துள்ளனர்.
இதுபற்றி விவேக் கூறும்போது, ‘‘அன்பு நண்பர் அஜித்துடன் மீண்டும் கரம் கோர்ப்பதில் மகிழ்ச்சி. ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்வேன்’’ என்றார். தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் கோவை சரளா அங்கிருந்தவாரே படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
பொங்கல் கொண்டாட்டம்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற திரைத் துறையினர் வேலைநிறுத்த காலகட்டத்தில்தான் ‘விசுவாசம்’ படத்தின் பெரும்பாலான பகுதிகளை படமாக்க திட்டமிட்டிருந்தனர்.வேலைநிறுத்தத்தால் அந்தத் தேதிகளில் மாற்றம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இப்போது 40 சதவீத படம் உருவாகியுள்ளது. உடனடியாக எல்லா வேலைகளையும் முடித்து படக்குழு முன்பு அறிவித்ததைப் போல தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இயலாது என்பது தெரிகிறது.
ஆகவே படத்தை பொங்கல் கொண்டாட்டமாக ரசிகர்களுக்கு அளிக்க முழு வேலைகளையும் திட்டமிட்டு விசுவாசத்தோடு வேலை பார்த்து வருகிறார்கள், ‘விசுவாசம்’ குழுவினர்.
Published on The Hindu – Tamil dated 28-6-2018