Director Vinoth’s Interview about Ajith & NKP at Vikatan and Dinamalar

3814

சிம்பிள் மேக்கப்… சின்ஸியர் நடிப்பு… இது வேற லெவல் அஜித்!

Anandha Vikatan

“இந்தப் படத்துக்காக நான் நான்குபேருக்கு நன்றி சொல்லணும். முதல்ல ஸ்ரீதேவி மேடம். அவங்கதான் இந்தப் படத்தை அஜித் சாரை வெச்சு தமிழ்ல பண்ணணும்னு ஆசைப்பட்டவங்க. அடுத்து ‘பிங்க்’ படத்தை எழுதி இயக்கிய அனிருத்தா ராய் சௌத்ரி சாருக்கு. மூன்றாவது நன்றி… யெஸ், அஜித் சாருக்கு. தமிழின் மிகப்பெரிய மாஸ் ஹீரோ இப்படி ஒரு படத்தில் நடிக்க முன்வந்ததற்கும் என்னை இயக்க வைத்ததற்கும். நான்காவது, இந்தப் படம் உருவாகக் காரணமாக இருந்த தயாரிப்பாளர் போனி கபூர் சாருக்கு…” – அஜித்தை இயக்கும் வினோத்தின் ஒவ்வொரு வார்த்தையிலும் பெருமிதம். ‘நேர்கொண்ட பார்வை’ மேக்கிங் கதை சொல்கிறார் வினோத்.

“ ‘சதுரங்க வேட்டை’ ரிலீஸுக்குப் பிறகு நெகட்டிவ் ஷேடுல அஜித் சாருக்காக ஒரு கதை ரெடி பண்ணியிருந்தேன். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ரிலீஸுக்குப் பிறகு ஒருநாள் அஜித் சாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘நெகட்டிவ் கேரக்டர் பண்ணின வரை போதும். இனி நான் பண்ற படங்கள் மூலமா மக்களுக்கு நம்பிக்கையையும் கனவையும்தான் விதைக்கணும்னு நினைக்கிறேன்’னு சொன்னவர், ‘எனக்கு ஒரு படம் பிடிச்சிருக்கு. அதை நீங்க ரீமேக் பண்ணினா நல்லா இருக்கும்’னு சொன்னார். ‘சொந்த ஸ்க்ரிப்ட் எழுதி இரண்டு படங்கள் பண்ணியிருக்கிற உங்ககிட்ட யாரும் இப்படிக் கேட்டிருக்க மாட்டாங்க. நீங்க நல்லா எழுதுவீங்கன்னு சொன்னாங்க. அந்தக் கதைக்கு நல்ல ரைட்டர் தேவைப்படுது. நீங்க பண்றீங்களா’ன்னு கேட்டார். ‘என்ன படம் சார்’னு கேட்டேன். ‘பிங்க்’னு சொன்னார்.

‘ ‘பிங்க்’ படத்தைத் தமிழ்ல நான் பண்ணணும்னு ஸ்ரீதேவி மேடம் விரும்பினாங்க. நான் பண்ணித்தர்றேன்னு ப்ராமிஸ் பண்ணியிருந்தேன். அவங்க இருக்கும்போது நடக்கலை. அவங்க இல்லாதப்ப அந்த ப்ராமிஸை தள்ளிப்போடக் கூடாது. இதுதான் சரியான தருணம்னு நினைக்கிறேன்’னார். அவர் இப்படிச் சொன்னது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. ஆனால், அஜித் சாரை இப்படி ஒரு படத்தில் ரசிகர்கள் ஏத்துக்குவாங்களான்னு எனக்கே தயக்கமா இருந்துச்சு.  உடனடியா என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம தயங்கினேன்.

அஜித் சாரே தொடர்ந்து பேசினார். ‘பெண்களுக்கெதிரா நடக்கிற விஷயங்கள் அதிர்ச்சியைத் தருது. பெண்களைப் பற்றிய புரிதல்ல நம்ம சமூகம் ரொம்ப பலவீனமா இருக்கு. எனக்கேகூட என்மேல வருத்தமிருக்கு. ஆரம்பகாலத்தில நானும் பெண்களைத் துரத்தித் துரத்திக் காதலிக்கிற படங்களில் நடிச்சிருக்கேன். நான் பண்ணின தவறை நானே சரி பண்ணணும்னு நினைக்கிறேன். இதுதான் என் அடுத்த படம். நீங்க இருந்தீங்கனா சந்தோஷம்’னு சொன்னார்.

‘பிங்க்’ படத்தின் எமோஷனை அப்படியே என்னால் கொண்டுவர முடியுமான்னு எனக்குள்ள ஒரு தயக்கம். அத சார் கவனிச்சிட்டு `கொஞ்சம் டைம் எடுத்து யோசிச்சு சொல்லுங்க’னு சொன்னார்.

மறுபடியும் அஜித் சாரைச் சந்திச்சப்போ, ‘இந்தப் படத்தை ஒரு பெண் இயக்குநர் பண்ணினா நல்லா இருக்கும் சார்’னு சொன்னேன். ‘தப்பு சார். ஒரு பெண், அவங்களுக்கு சாதகமா பேசுறாங்கன்னு மக்கள் ஈஸியா எடுத்துக்குவாங்க.  இது பெண்களுக்கான படம் கிடையாது. பசங்களுக்கான படம். இதை ஒரு ஆண் இயக்குநர் இயக்குறதுதான் சரி’ன்னு ரொம்பத் தெளிவா சொன்னார். அந்தத் தெளிவு தந்த உற்சாகம் எனக்குள் இருந்த எல்லாத் தயக்கங்களையும் உடைச்சுடுச்சு!”

“மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு எப்படி நடந்துச்சு?”

“அதுக்குத்தான் ரொம்பக் கஷ்டப்பட்டோம். நடிகர்கள் தேர்வில் ஆன தாமதத்தாலேயே அஜித் சாரின் கால்ஷீட் 40 நாள்களை வேஸ்ட் பண்ணிட்டோம். ஆனா அவர் அதைப்பற்றி எதையுமே கேட்கலை. நீங்க எப்ப ரெடின்னு சொல்றீங்களோ அப்ப ஷூட்டிங் போகலாம்னு சொன்னார். அப்படித்தான் வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, அபிராமி, ஆண்ட்ரியா தாரியாக், ராதாகிருஷ்ணன், அர்ஜுன், அஸ்வின், சுஜித் ஷங்கர், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்னு இன்ட்ரஸ்டிங்கான நடிகர் நடிகைகளைப் பிடிச்சோம். கல்கி கோச்சலின் முக்கியமான ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்தில் வராங்க!”

“வித்யாபாலன், சில தமிழ்ப் படங்களிலிருந்து விலக்கப்பட்டும், சில படங்களிலிருந்து அவங்களே விலகியும் இருக்காங்க. அவங்க எப்படி இந்தப் படத்துக்குள் வந்தாங்க?”

“அஜித் சாருக்கு ஜோடியா யார் பண்ணினா நல்லா இருக்கும்னு பேசினோம். டிஸ்கஷனில் வித்யாபாலன் மேடத்தின் பெயரும் வந்தது. ‘நான் பேசிட்டுச் சொல்றேன்’னு போனி சார் சொன்னார். மறுநாள் காலை, அவங்க ஓகே சொல்லிட்டாங்கன்னு மெசேஜ் பண்ணினார். வித்யா மேடம் தமிழ் நல்லா பேசுவாங்க. ஷூட்டிங் ஸ்பாட்ல, ‘நிறைய தமிழ்ப் படம் பண்ணணும்போல இருக்கு. அடுத்து எனக்கான ஸ்க்ரிப்ட் இருந்தா என்கிட்ட சொல்லணும்’னு சொல்லியிருக்காங்க. இந்த ஜோடியை எப்படி  இவ்வளவு நாளா மிஸ் பண்ணினோம்னு உங்களுக்கே தோணும்.”

“மற்ற எல்லாரும் ஓகே. ரங்கராஜ் பாண்டேவை எப்படி தேர்ந்தெடுத்தீங்க?”

“எல்லா கேரக்டர்களும் செட்டாயிடுச்சு. ஆனா, அரசுத் தரப்பு வழக்கறிஞர் கதாபாத்திரத்துக்கு மட்டும் ஆளே கிடைக்கலை. உதவி இயக்குநர்களிடம் பாண்டே பேரைச் சொன்னதும் அவங்க உற்சாகம் ஆகிட்டாங்க. அப்புறம் போனி கபூர், அஜித் சார் எல்லோரிடமும் பேசி ஓகே வாங்கினேன். பாண்டே சாரோ,   ‘தீரன் பார்த்தேன். க்ரைம் செய்திகளை வெச்சு ஒரு படம். எனக்குப் பிடிச்சிருந்தது. ஆனா என் வேலைச் சூழல்ல இதைப் பண்ண முடியுமான்னு தெரியலை. யோசிச்சுச் சொல்றேன்’னு சொன்னார். பாண்டே சார் தான் பார்த்துட்டிருந்த செய்தி சேனல் வேலையிலிருந்து விலக, ‘நாம பண்ணுவோம்’னு வந்தார். காஸ்டிங்ல அவர்தான் கடைசி. முடிச்சதும் ஷூட்டிங் கிளம்பினோம்.”

“ ‘பிங்க்’ படத்தில் மாஸ் கமர்ஷியல் விஷயங்கள் எதுவும் கிடையாது. ஆனால், இதில் அஜித்துக்காக ஏதாவது மாற்றங்கள் பண்ணியிருக்கீங்களா?”

“இதுல கதைதான் பிரதானம். ‘கதையை மீறி என்ன மாறுதல்களை பண்ணியிருந்தாலும், நான்தான் உங்களை ஃபோர்ஸ் பண்ணிப் பண்ணவெச்சேன்னு பேசுவாங்க. அதனால கதைக்கான மாற்றங்கள் மட்டும் பண்ணுங்க. எனக்காகப் பண்ணாதீங்க’ன்னார் அஜித் சார். அப்படி அந்த மையக்கதையை பாதிக்காத அளவுக்குச் சில மாற்றங்கள் பண்ணியிருக்கோம். பாடல்கள், ஃபைட் எல்லாமே இருக்கும். இவை தவிர கதையை டிஸ்டர்ப் பண்ணாம அஜித் சாருக்காக சில சர்ப்ரைஸ் மாறுதல்கள் பண்ணியிருக்கோம், அது சஸ்பென்ஸ்.”

“ ‘அமிதாப் கேரக்டரில் அஜித். அந்தக் கதாபாத்திரம் இவருக்கு எப்படிப் பொருந்தியிருக்கு?”

“முதல் நாள் ஷூட்டிங்குக்கு முன் லுக் டெஸ்ட் ஒண்ணு வெச்சிருந்தோம். வக்கீல் கோட்டுடன் மேக்கப் இல்லாமல் எளிமையா வந்தார். தலையில தண்ணியை ஸ்பிரே பண்ணி தலை சீவிட்டு ரெடி சார்னு ஃபர்ஸ்ட் லுக் போட்டோவுக்கு வந்து நின்னார். ஒரு ஸ்னாப் எடுத்து ஸ்க்ரீன்ல பார்த்தோம். எல்லாருமே ஹேப்பி. போட்டோவைப் பார்த்ததும் கேமராமேன் நீரவ்ஷா சார் என்னைப் பார்த்துச் சிரிச்சார். நான் அவரைப் பார்த்துச் சிரிச்சேன். அவரோட அந்தப் போட்டோவைப் பார்த்ததும்தான் எனக்கு 100 சதவிகிதம் நம்பிக்கை வந்துச்சு. மறுநாள்  ஷூட்டிங். கோர்ட் காட்சிகள்தான் எடுத்தோம். ஒட்டுமொத்த யூனிட்டுமே, அஜித் சார் எப்படி நடிக்கப்போறார்னு ஆவலா காத்திருக்கு. அட்ட காசமான டயலாக் டெலிவரி, அமர்க்களமான பாடி லாங்குவேஜ்னு பின்னிட்டார்.”

“யுவன்ஷங்கர் ராஜா, நீரவ்ஷான்னு இன்ட்ரஸ்டிங்கான டீம். என்ன பண்ணியிருக்காங்க?”

“நான் அஜித் சாருடன் முதல் படம் பண்றேன். அதனால டீம்ல மத்தவங்க ஏற்கெனவே அவருடன் வேலை செஞ்சவங்களா இருந்தா நல்லதுன்னு நினைச்சேன். அப்படித்தான் நீரவ்ஷா சாரைப் பிடிச்சோம். ‘பில்லா’, ‘மங்காத்தா’ன்னு அஜித் சாருக்கு ஹிட் மியூசிக் பண்ணியவர் யுவன். இப்படி இந்த டீம் படத்துக்கு பலம் சேர்த்திருக்காங்க.”

“படம் முடிஞ்சதும் அஜித் என்ன சொன்னார்?’’

“ ‘50 படங்களுக்கு மேல பேசின மொத்த டயலாக்கையும் சேர்த்து ஒரே படத்துல பேச வெச்சுட்டீங்க’ன்னு சிரிச்சுக்கிட்டே சொன்னார். டப்பிங்கின்போது படம் பார்த்துட்டு ரொம்ப சந்தோஷப்பட்டு, கட்டிப்பிடிச்சு நன்றி சொன்னார். ‘நான்தான் சார் நன்றி சொல்லணும். ஒரு ஸ்டார் இப்படியொரு படம் நடிக்கிறதே பெரிய விஷயம். அதில் நானும் இருக்கேன் என்பது எனக்குத்தான் சந்தோஷம்’னேன். ‘இல்லை, இது டீம் ஒர்க். இந்த டீமோட ஒர்க் பண்ணினதுல ரொம்ப சந்தோஷம்’னார்.”

“ஆனா வெளியில நிறைய செய்திகள். உங்க ரெண்டு பேருக்கும் பிடிக்கலை, வாக்குவாதம்னு ஏகப்பட்ட செய்திகள்?”

“ஒரு இயக்குநர், ஹீரோவோட சண்டை போட வேண்டிய அவசியமே இல்லை. இது பல கோடி ரூபாய் சம்பந்தப்பட்ட விஷயம். ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து வேலை செஞ்சா மட்டுமே ஆடியன்ஸைத் திருப்திப்படுத்த முடியும். ஆனா அப்படியான செய்திகள் வரும்போது எனக்கு லேசா பதற்றமா இருக்கும்.  ஆனால் அஜித் சாரோ, ‘நெகட்டிவிட்டியை மைண்டுல எடுத்துக்காதீங்க. டோன்ட் ரியாக்ட்’ம்பார்.”

“தயாரிப்பாளர் போனி கபூர் என்ன சொன்னார்?”

“போனி கபூர் சார் பாலிவுட்ல சுமார் 40 படங்கள் வரை தயாரிச்சவர். அதுல ‘அந்த ஏழு நாட்கள்’, ‘குஷி, ‘போக்கிரி’, ‘சார்லி சாப்ளின்’னு  80 சதவிகிதம் படங்கள் தென்னிந்திய மொழிப் படங்களோட ரீமேக்தான். செலவைப் பற்றிக் கவலையே படமாட்டார். ஃப்ளைட் டிக்கெட் கிடைக்கலைன்னா, ஹெலிகாப்டர் புக் பண்ணிடுவோம்பார். ஒரு தரமான படத்துக்கான தரமான தயாரிப்பாளர்.”

“அஜித்தின் அடுத்த படத்தையும் நீங்கதான் இயக்குறீங்க. அதுக்கும் போனி கபூர்தான் தயாரிப்பாளர். அந்தப் படத்தை எப்ப ஆரம்பிக்கிறீங்க?”

“ஒரு படம் பண்ணிட்டிருக்கும்போது எல்லாருக்கும் அந்த டீமைப் பிடிச்சிடும். இதே டீம் இன்னொரு படம் பண்ணினா நல்லா இருக்கும்னு ஒரு நம்பிக்கை வரும். போனி சாரும் அஜித் சாரும் கலந்து பேசினாங்க. என்கிட்ட ஏதாவது கதை இருக்கான்னு கேக்கும்போது நான் ஒரு லைன் சொன்னேன். அது பிடிச்சிருந்துச்சு. அதைத்தான் இப்ப டெவலப் பண்ணி ஸ்க்ரிப்ட் பண்ணிட்டிருக்கோம். அது தரமான ஆக் ஷன் படமா இருக்கும். `நேர்கொண்ட பார்வை’ ரிலீஸுக்குப் பிறகு அந்தப் படம் ஆரம்பிக்கும்.”

Published on Anandha Vikatan dated June 13, 2019

 

அஜித் தரமான மனிதர் : நெகிழும் வினோத்

Dinamalar

சதுரங்க வேட்டை, தீரம் அதிகாரம் ஒன்று படங்களின் இயக்குநர் வினோத், அஜித்தை வைத்து இயக்கி உள்ள படம் நேர் கொண்ட பார்வை. ஹிந்தியில் வெற்றி பெற்ற பிங்க் படத்தின் ரீ-மேக் இது. அஜித், வக்கிலாக நடித்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட டிரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

நேர் கொண்ட பார்வை பட அனுபவம் குறித்து வினோத் கூறியிருப்பதாவது : நடிகர் அஜித், எப்போதும் ஒரு வார்த்தை சொல்லி விட்டால் அது சொன்னது தான். வெற்று வாய் வார்த்தையாக எதையும் அவர் சொல்ல மாட்டார். ஸ்ரீதேவிக்கு சொன்னபடி ஒரு படம் நடித்து கொடுத்திருக்கிறார்.

பிங்க் படத்தில், நடிகர் அமிதாப்புக்கு 75 வயதுடைய கதாபாத்திரம். ஆனால், நேர் கொண்ட பார்வையில் நடிகர் அஜித்துக்கு 47 வயது கதாபாத்திரம். அதாவது, 75 வயதுடைய கதாபாத்திரம்தான் இங்கு, ஒருஜினாலிட்டிக்காக வயது குறைந்து காட்டப்படுகிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் மிகுந்த சிரத்தை எடுத்து நடித்திருக்கிறார் நடிகர் அஜித்.

இந்தப் படத்தில், நடிகர் அஜித்தின், மிகச் சிறப்பான நடிப்பை யாரும் பார்த்திருக்க மாட்டீர்கள். மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் அஜித். நடிப்புத் திறமையும்; அழகு கொஞ்சும் நடிகையுமான வித்யா பாலன், படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் என்பதை விட மின்னியிருக்கிறார். ஜோடி கணக் கச்சிதமாக அமைந்தது.

பொதுவாக, பெண்களை ஆண்கள் எப்படி பார்க்க வேண்டும்; எப்படி அவர்களை அணுக வேண்டும்; புரிந்து கொள்ள வேண்டும் என்பது தான் படத்தின் மையக் கரு. கணவராகவே இருந்தாலும், மனைவி என்ற ஒரு பெண், கணவன் என்னும் ஆணிடம் எப்படி அணுக வேண்டும்; நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையான விஷயத்தை சொல்லும் இயல்பான ஒரு கதைதான், நேர் கொண்ட பார்வை படம். இந்தப் படத்தில் முழுக்க முழுக்க பெண்களை போற்றி, பெண்களை பேச வைக்கும் ஒரு படமாக எடுத்திருக்கிறோம்.

நடிகர் அஜித், எப்படி இருக்கிறாரோ அதில் இருந்து கொஞ்சமும் விலகாமல், அவருக்கு பெரிய அளவில் மேக்-அப் இல்லாமல் இயல்பில் எப்படி இருப்பாரோ, அப்படியே நடிக்க வைத்திருக்கிறோம். அதேபோல, ஒரிஜினல் பிங்க் படத்தின் முக்கிய திரைக்கதையில் இருந்து கொஞ்சமும் மாற்றாமல் அப்படியேதான் எடுத்திருக்கிறோம். இந்தி பிங்கில் சண்டைக் காட்சிகள் கிடையாது; ஆனால், தமிழில் இரு சண்டைக் காட்சிகள் உள்ளன.

இந்தப் படத்தில் வழக்கத்துக்கு மாறாக, நிறைய புதுமுகங்களை நடிக்க வைத்திருக்கிறேன். ஒவ்வொருவரிடமும், மிக மிக அன்பாகப் பழகினார் நடிகர் அஜித். எனக்குத் தெரிந்த வரையில், அவர், படம் முடிந்து டப்பிங் பேசுவதற்கு முன், எந்தப் படத்தையும் அவர் பார்க்க முயற்சித்ததில்லை; பார்த்ததும் இல்லை. ஆனால், இந்தப் படத்தைத்தான், டப்பிங் வேலை நடப்பதற்கு முன்னாலேயே மொத்தப் படத்தையும் பார்த்து விட்டார். படம் பார்த்து விட்டு வந்து, என்னை கட்டியணைத்தார். நான் நெகிழ்ந்து போனேன். அதில் இருந்து இன்னும் நான் மீளவில்லை. அப்படியொரு தரமான மனிதர் நடிகர் அஜித்.

இவ்வாறு, ஹெச்.வினோத் கூறியிருக்கிறார்.

 

Published on Dinamalar dated June 15, 2019

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here