Director Saran opens up on Love Days of Ajith – Shalini during Amarkalam Movie

4214

20 ஆண்டுகளுக்கு முன்பு 1999-ம் ஆண்டு வெளியான ‘அமர்க்களம்’ படத்தில் நடிக்கும்போதுதான் அஜித்துக்கும் ஷாலினிக்கும் காதல் பூத்தது. அப்போது, தான் எடுத்த சினிமா காதலையும் அவர்களுக்குள் நிகழ்ந்த ரியல் காதலையும் பகிர்ந்துகொள்கிறார் ‘அமர்க்களம்’ இயக்குநர் சரண்.

அஜித் - ஷாலினி

“ ‘’காதலுக்கு மரியாதை’ படத்துக்குப்பிறகு தமிழக ரசிகர்கள், ஷாலினியை தங்கள் வீட்டுப்பெண்ணாகக் கொண்டாடிய சமயம். நான் வைத்திருந்த ‘அமர்க்களம்’ ஸ்கிரிப்டும் ஃபேமிலி சப்ஜெக்ட். அதனால் ஷாலினி பொருத்தமாக இருப்பார் என்று அவரைக் கதாநாயகியாக தேர்வு செய்தேன். ஷாலினியைச் சந்தித்தேன். ‘சின்ன வயசுலேர்ந்து சினிமாவில் நடிச்சுநடிச்சு எனக்கு திகட்டிடுச்சு. மேற்கொண்டு படிக்கலாம்னு முடிவுசெய்திருக்கேன். அதனால, படம் வேண்டாம் ஃப்ளீஸ்’ என்று மறுத்துவிட்டார். பிறகு ஷாலினியை சந்தித்ததைப்பற்றி அஜித்திடம் சொன்னேன். உடனே அவர் ஷாலினிக்கு போன்செய்து தன்னோடு நடிக்கும்படி கேட்டுக்கொண்டார். ஷாலினியின் தோழிகள் பலபேர் அஜித்துக்கு ரசிகைகள். அதனால் ‘அமர்க்களம்’ படத்தில் நடிக்க ஷாலினி ஒப்புக்கொண்டார்.

பிறகு வைரமுத்து சாரை பாடல் எழுதுவதற்காக பார்க்கப்போனேன். ‘இதில் ஷாலினி நடிக்கிறார்’ என்றேன். ஷாக்கானார். ‘நிச்சயமா அந்தப் பொண்ணு நடிக்காது. குஞ்சுமோன் படத்துக்காக நானே போனில் பேசினேன். படிக்கப்போறேன்னு சொன்னாங்க. உங்க படத்துலயும் நடிக்க வாய்ப்பே இல்லை’ என்றார். பிறகு, ‘அமர்க்களம்’ படப்பிடிப்புக்கு ஷாலினி வந்தபிறகே நான் சொன்னது உண்மை என்று வைரமுத்து சார் நம்பினார்.

முதன்முதலில் ஷாலினி தனியாக நடிக்கும் காட்சிகளை மட்டும் படமாக்கினேன். அப்போது அஜித்தும் எப்போதாவது ஷூட்டிங்கை வேடிக்கைப் பார்க்க வருவார். பிறகு இருவரும் இணைந்து நடிக்கும் காட்சியைப் படமாக்க ஆரம்பித்தேன். கதைப்படி ‘சீனிவாசா தியேட்டரில் ஓடும் ‘அண்ணாமலை’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை ஷாலினி எடுத்துவந்து தன்வீட்டில் ஒளித்துவைத்துக்கொள்வார். அப்போது கோபமாக கையில் கத்தியுடன் வரும் அஜித் அவரிடம் சண்டைபோட்டு படப்பெட்டியைப் பிடுங்குவார். இதுதான் காட்சி. ரிகர்சல் பார்க்கத் தொடங்கினேன். அஜித் கடுமையாக சண்டைபோட திடீரென ஷாலினி கையில் கத்தி கிழித்து ரத்தம் வழிந்தது. யூனிட்டே பதறிவிட்டது. அஜித்தும் அதிர்ச்சியாகி அதன்பின் சுதாரித்துக் கொண்டு ஷாலினிக்கு முதலுதவி செய்தார்.

அஜித் - ஷாலினி

‘அவ்வளவுதான், நாளையிலிருந்து ஷாலினி ஷூட்டிங் வரமாட்டார்’ என்று யூனிட்டில் உள்ளவர்கள் எல்லோருக்கும் கவலை. அப்போது ஷாலினியின் அப்பா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தார். நடந்த சம்பவத்தைக் கூறினோம். கடுமையாக திட்டப்போகிறார் என்று பயந்தோம். அந்த இடமே கொஞ்சநேரம் அமைதியாக இருந்தது. திடீரென என் கைகளைப் பிடித்து குலுக்கியவர், ‘சின்னவயசுல இருந்தே ஷாலினி நடிக்கும் படங்கள்ல அவருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டுச்சுனா, அந்தப் படம் நிச்சயம் ஹிட்’ என்று பாராட்டினார். பிறகுதான் அஜித்தும் நானும் ரிலாக்ஸ் ஆனோம்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் தன் காதலை ஷாலினியிடம் சொன்னதே ஒரு சுவாரஸ்யமான சம்பவம்தான். சீனிவாசா தியேட்டரில் ஷூட்டிங் தொடர்ந்தது. அன்று என் வலப்பக்கம் அஜித், இடப்பக்கம் ஷாலினி அமர்ந்திருந்தனர். அப்போது திடீரென என்னிடம், ‘சரண், ‘அமர்க்களம்’ படத்தை ஒரே ஷெட்யூலில் ஷூட்டிங் நடத்தி முடிச்சிடுங்க. நான் வேறு படங்களுக்குக் கொடுத்திருக்கிறகால்ஷீட் தேதிகளை எல்லாம் இதுக்கே கொடுத்திடுறேன். ஏன்னா ரொம்பநாள் இந்தப் படத்தில் நடிச்சேன்னா, ஷாலுவை காதலிச்சுடுவேனோன்னு பயமா இருக்கு. அதனால ஷூட்டிங்கை சீக்கிரம் முடிச்சுடுங்க’ என்று ஷாலினிக்கும் கேட்கும்படி சத்தமாகச் சொன்னார். அதாவது என் வாயிலாக ஷாலினிக்குத் தன் காதலை ஃப்ரப்போஸ் பண்ணினார். அப்போது ஷாலினி முகத்தைப் பார்த்தேன் அவரது முகத்தில் ஆயிரம் வால்ட் மின்சார அதிர்ச்சி. பிறகு அஜித் தன்னை காதலிப்பதை உணர்ந்ததும், ஷாலினியின் முகத்தில் சந்தோஷப் புன்னகை. அந்தத் தருணத்திலிருந்தே அஜித், ஷாலினி இருவருக்குமான புரிதல் தொடங்கிவிட்டது என்று சொல்லலாம்.

ஒரு காட்சியில், ஷாலினியைக் காதலிக்கும்படியும், அவருக்குப் பொக்கே தரும்படியும் சொல்வார். அப்போது ஷாலினி முகத்தில் காதல், வெட்கம், சந்தோஷம் மாறிமாறி வழியும். அந்தக் காட்சியைப் படமாக்கும் வேலையில் இருந்தேன். அப்போது ‘சரண், ஷாலினியிடம் காதல் சொல்வதற்காக தரவேண்டிய பொக்கேவை கம்பெனி பணத்தில் வாங்க வேண்டாம், நானே சொந்தப் பணத்தில் வாங்கி ஷாலுவுக்குத் தருகிறேன்’ என்று சொல்லிவிட்டார் அஜித். சொன்னமாதிரியே பொக்கே வாங்கிக்கொண்டு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டார். ஷாலினியின் அப்பா தினசரி ஷூட்டிங் வருவார். அன்று அப்படி வந்தவரிடம் இந்த பொக்கே சங்கதியைத் தெரியாமல் மறைப்பது எப்படி? என்று தெரியாமல் தவித்தோம்.

அஜித் - ஷாலினி

நாங்கள் நினைத்தமாதிரியே, ‘இந்தப் பொக்கே யாருக்கு…’ என்று அவர் கேட்க எனக்கும் அஜித்துக்கும் உதறல். அப்போது, ‘அலைபாயுதே’ படமும் நடந்துகொண்டிருந்தது. ஷாலினி தன் அப்பாவிடம், ‘மாதவனும், சரிதாவும் தீவிரமாகக் காதலிக்கிறார்கள். சரிதாவுக்கு என் மூலமா கொடுக்கறதுக்காக மேடி பொக்கே வாங்கி அனுப்பியிருக்கார்’ என்று சொல்லி சமாளித்தார். அது, அஜித் தனக்காக வாங்கியிருக்கும் பொக்கே என்று ஷாலினிக்கும் தெரியும் என்பது அப்போதுதான் எங்களுக்குத் தெரியும். நானும் எதுவுமே தெரியாதைப்போல் காட்டிக்கொண்டு ’ஓ இந்த பொக்கேயை ஷூட்டிங்ல யூஸ் பண்ணிக்கலாமே’ என்று சொல்லிவிட்டு அந்தக் காட்சியை படமாக்கினேன். தன் காதலுக்காக ஷாலினிக்கு அஜித் கொடுத்த முதல் காதல்பரிசு அந்த பொக்கேதான்.

‘அமர்க்களம்’ படப்பிடிப்பின் இடைவேளைகளில் அஜித்தும், ஷாலினியும் தனியாக அமர்ந்து சிரிக்கும் காட்சிகளை அவர்களுக்கே தெரியாமல் படமாக்கினேன். காதலின் வெட்கம், சிரிப்பு… என்று அந்தக் காட்சிகள் உண்மையான காதலை எதிரொலித்தவை. மே-1-ம் தேதி அஜித்துக்குப் பிறந்தநாள் வருகிறது. ஷாலினி என்னிடம், ‘சரண்ஜி எனக்கு நீங்க ஒரு உதவி செய்யணும். நான் கிஃப்ட் தரேன். நீங்க அதை ஏப்ரல் 31-ம் தேதி நைட் 12-மணிக்கு அஜித்திடம் கொண்டுபோய் கொடுக்கணும்’ என்று கேட்டுக்கொண்டார். ‘சின்ன கிஃப்ட்டாதானே இருக்கும்’ என்று நினைத்து, ‘கொடுத்திடலாம்’ என்று நினைத்திருந்தேன்.

ஷாலினி அவருடைய காரின் டிக்கியைத் திறந்துகாட்டினார். அதனுள் ஏராளமான கிஃப்ட்கள் குவிந்துகிடந்தன. ‘இதையெல்லாம் நீங்கள்தான் அவரிடம் தர வேண்டும். நீங்கள் அஜித் அருகிலிருந்து ஒவ்வொரு பொருளையும் பார்க்கும்போதும் அவருடைய ரியாக்‌ஷன் என்ன என்று பார்த்து எனக்குச் சொல்ல வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். அஜித்தின் பிறந்தநாளுக்கு முதல்நாள் இரவு 9 மணிக்கே அவரின் வீட்டுக்குச் சென்றுவிட்டேன். எனக்கு அஞ்சு நிமிஷத்துக்கு ஒருமுறை ஷாலினி போன் செய்வார் ‘அஜித்தை 12 மணி வரை தூங்கவிடாதீங்க. பேசிக்கிட்டே இருங்க’ என்று சொல்லிக்கொண்டேயிருந்தார்.

அஜித்தோ, ‘உங்களுக்கு அடிக்கடி போன் வந்துட்டே இருக்கே. நீங்க ஃப்ரீயாதானே இருக்கீங்க’ என்றார். ‘நம் படத்தோட எடிட்டிங் ஓடிகிட்டுருக்கு அதான் என் அஸிஸ்டென்ட் போன் பண்றாங்க’ என்று பொய்சொல்லி சமாளித்தேன். இரவு 12 மணிக்கு போன் வந்தது எனது போனை அஜித்திடம் கொடுக்கச்சொல்ல, கொடுத்தேன் அவருக்கு பயங்கர ஷாக். அப்படியே நெகிழ்ந்து போய்விட்டார். அவரது வீட்டுவாசலில் நிற்கும் கதவைத் திறக்கச் சொன்னார், கதவை திறந்த அஜித்துக்கு மேலும் இன்ப அதிர்ச்சி. வாசல் முழுவதும் ஷாலினி கொடுத்தனுப்பிய விதவிதமான பரிசுப் பொருள்கள். எங்கள் நண்பர் மோகன், அவற்றை காரில் அடுக்கிவைத்திருந்தார். அதைப் பார்த்து ஆனந்தத்தில் அஜித் கண்களில் கண்ணீர் வழிந்தது.

அதன்பின் என் கையில் செல்போனை கொடுத்துவிட்டு, ஒவ்வொரு பொருளாக எடுத்துப் பார்க்கும்போதும் அவரது முகத்தில் என்னென்ன மாறுதல் ஏற்படுகின்றன என்பதை ஒவ்வொன்றாக நான் ரன்னிங் கமென்ட்ரியாக ஷாலினிக்குத் தெரிவித்துக்கொண்டேயிருந்தேன். அஜித் தனக்கு என்னென்ன பிடிக்கும் என்று ஷாலினியிடம் சொல்லியிருந்தாரோ அத்தனை பொருள்களும் அங்கே இருந்தன, சின்ன பைக் உட்பட.

அஜித் - ஷாலினி

பிறகு என் சொல்போனை வாங்கிய அஜித், அதிகாலை ஆறு மணிவரை தன் வீட்டு மாடியில்நின்று ஷாலினியிடம் பேசிக்கொண்டே இருந்தார். அதை நானும் தூரமாக நின்று பார்த்து ரசித்துக்கொண்டிருந்தேன். கே.பாலசந்தர் சார் இயக்கிய ‘அழகன்’ படத்தில் ஒருபுறம் மம்மூட்டியும் மறுபுறம் பானுப்ரியாவும் விடியவிடிய போன் பேசுவார்களே, அந்தக் காட்சிதான் அப்போது என் நினைவுக்கு வந்தது.

அஜித் தன் குடும்பத்தின் மீதும் ஷாலினியின் குடும்பத்தாரிடமும் உண்மையான மாறாத அன்புகொண்டிருந்தார். அப்போது திருவான்மியூரில் வீடுகட்டிக்கொண்டிருக்கும்போது என்னை அழைத்துகொண்டுபோய் காட்டினார். நான்கு தளம் கொண்ட வீடு. என்னைப்பார்த்து, ‘தரைதளம் எங்க அம்மா, அப்பாவுக்கு. முதல்மாடி, எனக்கும் ஷாலுவுக்கும். இரண்டாவது மாடி ஷாலுவோட அம்மா, அப்பா ஃபேமிலுக்கு. மூன்றாவது மாடி என் அண்ணன் குடும்பத்துக்கு. என்னைச்சேர்ந்தவங்க எல்லாரும் ஒரே குடையின்கீழ் இருக்கணும்னு ஆசைப்படுறேன். அதுதான் என் ஆசை’ என்று சந்தோஷமாகச் சொன்னார்.

Published on Vikatan dated Feb 14 , 2018 .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here