Ajith will strengthen Indian Cinema – Valimai Spl

1794

இந்த தீபாவளி ‘தல’யின் தீபாவளியாக ஜொலிஜொலிக்க வேண்டும் என இப்போதே எதிர்பார்ப்புகளை அள்ளி வீச ஆரம்பித்துவிட்டார்கள் அஜித்தின் ரசிகர்கள். அதுவும் ‘நேர்கொண்ட பார்வை’க்குப் பிறகு இயக்குநர் வினோத்தின் ஒரிஜினல் ஸ்கிரிப்ட் என்பதால் கோலிவுட்டின் ஆல்ரவுண்ட் ஏரியாவிலும் கவனம் ஈர்த்து வருகிறது போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’.

ஹைதராபாத்தில் ஒரு ஷெட்யூல் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு வந்த அஜித் டீம், அடுத்து என்ன செய்யப் போகிறது?

‘வலிமை’யின் நிலவரம் என்ன? அஜித்தின் நெருங்கிய வட்டத்தில் விசாரித்தால், அதிரடி அள்ளுகிறது. முதலில் ஒரு ஃப்ளாஷ்பேக்.அஜித் – ஹெச்.வினோத் காம்பினேஷன் உருவானதன் பின்னணி இதுதான். அதை ஹெச்.வினோத்தே சொல்கிறார்…

‘‘கார்த்தி நடிப்புல நான் இயக்கின ‘தீரன் அதிகாரம் ஒன்று’க்குப் பிறகு அஜித் சாரை சந்திக்கும் வாய்ப்பு அமைஞ்சது. கையோடு ஒரு கதையையும் எடுத்துட்டுப் போயிருந்தேன். அந்தக் கதையை அஜித் சாரிடமும் சொன்னேன். அப்பதான் அவர், ‘‘ ‘பிங்க்’ படத்தை ரீமேக் பண்ற ஐடியால இருக்கேன். உங்களுக்கு ஆர்வமிருந்தா அதைப் பண்ணலாமா’னு கேட்டார். எனக்கு ரொம்பவே தயக்கம். முதன் முதல்ல அல்டிமேட் ஸ்டாரோடு ஒர்க் பண்ணப் போறேன். அதுவும் ரீமேக்கானு தயங்கினேன். தவிர ரீமேக் பண்றப்ப ஒரிஜினலோடு கம்பேர் பண்ணுவாங்களேனு சின்னதா பயமும் இருந்துச்சு.

நான் தயங்கினதைப் பார்த்த அஜித் சார், ‘நீங்க முதல்ல ‘பிங்க்’ பாருங்க. அப்புறம், நாம பேசலாம்’னு சொன்னார். அவரே இவ்வளவு கான்ஃபிடன்டா அதைப் பண்ண நினைக்கறார்னா நிச்சயம் தமிழ்லயும் அந்தப் படம் பேசப்படும்னு உறுதியா அவர் நம்பறார்னு அர்த்தம்.இந்தப் புள்ளி புரிபட்டதும் ‘பிங்க்’ பார்த்தேன். தைரியமா அதை அஜித் சாரை வைச்சு ‘நேர்கொண்ட பார்வை’யா இயக்கினேன்.

அந்தப் பட ஷூட்டிங் சமயத்துலதான் மறுபடியும் அஜித் சாரோடு இணையும் வாய்ப்பு அமைஞ்சது. வெறும் ஆக்‌ஷன் கமர்ஷியல்னு மட்டும்தான் முடிவாச்சு. கதை அப்ப ரெடியாகல. ‘நேர்கொண்ட பார்வை’ ரிலீஸுக்குப் பிறகுதான், ‘அஜித் 60’ விறுவிறுனு பறக்க ஆரம்பிச்சது…’’
இதுதான் இயக்குநர் ஹெச்.வினோத், எல்லா தருணங்களிலும் நெகிழ்ச்சியுடன் சொல்லும் விஷயம். இனி விஷயத்துக்கு வருவோம்.

* ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் க்ளைமேக்ஸ் டைமிலேயே ‘வலிமை’க்கான ஒன்லைன் உருவாகிவிட்டதாம். அதன் சீக்ரெட் பற்றி நம் காதைக் கடிக்கிறார் அந்தப் படத்தில் வேலை செய்த ஒருவர்.‘‘நேர்கொண்ட பார்வை’ ஷூட் அப்பவே ஹெச்.வினோத்தின் ஒர்க்கிங் ஸ்டைல் அஜித்துக்கு பிடிச்சுடுச்சு. ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஸ்கிரிப்டுல இருக்கிற டீடெயிலுக்காக வினோத் எந்தளவு உழைச்சிருக்கார்னு அஜித் சார் ஸ்மெல் பண்ணிட்டார். அதனாலயே சாரோட குட் புக்குல வினோத் இணைஞ்சுட்டார்.

ஆக்சுவலா ‘தீரன்’ படத்துக்காக நிறைய காவல்துறை அதிகாரிகளை வினோத் சந்திச்சு பேசினார். எல்லாருடைய அனுபவங்களும் வினோத்தை பிரமிக்க வைச்சுது. எல்லாத்தையும் பக்காவா நோட்ஸ் எடுத்துக்கிட்டார். அதுல ‘தீரன்’ படத்துக்கு தேவையானதை மட்டும் பயன்படுத்தினார்.
இந்த நேரத்துல ‘தீரன்’ படத்துக்காக, தான் சந்திச்ச போலீஸ் அதிகாரிகள்ல ஒருத்தரை வினோத் பார்த்திருக்கார். அப்ப அந்த அதிகாரி கேஷுவலா, ‘உங்க பட ஹீரோ அஜித் சாரை ரைஃபிள் பிராக்டீஸ்ல பார்த்தேன்’னு சொல்லியிருக்கிறார்.

சட்டுனு வினோத்துக்கு ஸ்பார்க் அடிச்சிருக்கு. மறுநாள் அஜித் சார்கிட்ட ‘நீங்க கன் ஷூட் பிராக்டீஸ் பண்றீங்களா’னு கேட்டிருக்கார். ‘எஸ்…’ என சிரித்த அல்டிமேட் ஸ்டார், ‘மாவட்ட அளவிலான போட்டிகள்லயாவது ஜெயிக்கணும்னு ஆசை’னு கண்சிமிட்டி சிரிச்சிருக்கார்.

வினோத்துக்கு இந்தப் புள்ளி போதாதா..? பக்கா ஆக்‌ஷனுக்கான மெட்டீரியல் ஆச்சே! அந்த செகண்ட்ல ‘வலிமை’ ஒன்லைனை ஃபார்ம் பண்ணிட்டார். ஏற்கனவே போலீஸ் ஆபீசர்ஸ்கிட்ட பேசி, தான் நோட்ஸ் எடுத்திருந்ததை… ‘தீரன்’ படத்துல பயன்படுத்தாத இன்னொரு வெடிகுண்டை… ‘வலிமை’ல வைச்சிருக்கார்!நீங்க வேணும்னா பாருங்க… ‘வலிமை’ கோர்ஸ்வாலா பட்டாசு!’’ கண்கள் மின்ன சொல்கிறார் அவர்.

* அஜித்துக்கு போலீஸ் கேரக்டர் புதிதில்லை. என்றாலும் ‘வலிமை’ புத்தம் புதிது! ஆக்‌ஷனுடன் ஃபேமிலி என்டர்டெயின்மென்ட்டும் கலந்த பக்கா பேக்கேஜ். தமிழ்ப் பட போலீஸ் கதை வரலாற்றிலேயே ‘வலிமை’ முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்கிறார்கள்.

* தொடக்கத்தில் முழுக்க முழுக்க வெளிநாட்டில் படமாக்க நினைத்திருக்கிறார்கள். இதற்காக லொகேஷன்ஸ் பார்த்து அனுமதியும் வாங்கிவிட்டார்கள். ஆனால், இப்பொழுது கதையில் மாற்றம் செய்து சென்னை, ஹைதராபாத்தில் சம்பவங்கள் நடப்பதுபோல் பட்டை தீட்டியிருக்கிறார்கள்.

* யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்களை கம்போஸ் செய்துவிட்டார்கள். தீம் மியூசிக்கையும் ரெடி பண்ணிவிட்டார்கள்!

* சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் அஜித் வீட்டு இன்டீரியர் செட் போடப்பட்டு ஃபேமிலி போர்ஷனை ஷூட் செய்து முடித்துவிட்டார்கள். ஹைதராபாத்தில் திலீப் சுப்பராயன் மாஸ்டரின் கோரியோகிராஃபில் ஆக்‌ஷன் சீக்குவென்ஸ் படமாக்கப்பட்டுள்ளன.

* ரஸ்க் சாப்பிடுவது போல் எப்பொழுதும் ரிஸ்க் எடுக்கும் அஜித் இம்முறையும் கிலோ கணக்கில் ரஸ்க் சாப்பிட்டிருக்கிறாராம்! படத்தின் முக்கியப் பகுதியாக வரும் கார் சேஸிங் ரசிகர்களை சீட் நுனிக்கு வரவழைக்கும் என்கிறார்கள். அந்தளவுக்கு தன் உயிரையும் பொருட்படுத்தாமல் அந்த ஆக்‌ஷன் பிளாக்கில் இன்வால்வ் ஆகி முடித்துக் கொடுத்திருக்கிறாராம் அஜித்.

* டூப் போடலாம் என வினோத்தும் திலீப் சுப்பராயன் மாஸ்டரும் கெஞ்சிக் கேட்டுக் கொண்ட பிறகும் மறுத்திருக்கிறார் அஜித். ‘‘இவ்வளவு விபத்துகளுக்குப் பிறகும் நான் நல்லா இருக்கேன்னா, என் சின்ன வயசுல நான் விளையாடிய ஸ்போர்ட்ஸ்தான் காரணம்… டோன்ட் ஒரி… எனக்கு ஒண்ணும் ஆகாது… நீங்க மனசுல நினைச்சிருக்கா மாதிரியே எடுங்க…’’ என அவர்கள் இருவரிடமும் சொல்லியிருக்கிறார் அஜித்.

* கதாநாயகியாக நடிக்க நயன்தாரா, காஜல் அகர்வால் உட்பட டாப்மோஸ்ட் ஹீரோயின்களின் பெயர்கள் அடிபட்டன. ‘விஸ்வாசம்’ படத்தில் ஏற்கனவே அஜித் – நயன் ஜோடி பட்டையைக் கிளப்பிவிட்டது. எனவே, வேறு யாரையாவது ஃப்ரெஷ்ஷாகப் பார்க்கலாம் என யோசித்து ‘காலா’வில் ரஜினியின் காதலியாக வந்த ஹூமா குரேஷியை செலக்ட் செய்திருக்கிறார்கள். அனுராக் காஷ்யப்பின் ‘கேங்ஸ் ஆஃப் வாஸேப்பூர்’ உட்பட பல இந்திப் படங்களில் முத்திரை பதித்திருப்பவர் ஹூமா என்பது குறிப்பிடத்தக்கது.

* அதிரடி ஆக்‌ஷன் போலீஸ் ஸ்டோரியில் ஹீரோயினுக்கு எந்தளவு முக்கியத்துவம் தர முடியுமோ… எவ்வளவு சீன்ஸ் ஒதுக்க முடியுமோ… கதைக்கு எவ்வளவு தேவையோ… அவ்வளவுக்கு மட்டுமே ஹூமா குரேஷியின் போர்ஷன் இருக்குமாம். கதையை டிஸ்டர்ப் செய்யும் விதத்தில் அநாவசியமாக ஹீரோ – ஹீரோயின் போர்ஷன்ஸ் வரக் கூடாது என ஸ்டிரிக்ட்டாக அஜித் சொல்லிவிட்டாராம்.

*தெலுங்கில் ‘கேங் லீடர்’, ‘90 எம்.எல்’, ‘ஹிப்பி’யில் நடித்த கார்த்திகேயா கும்மகொண்டா வுக்கு இதில் முக்கிய ரோல். தவிர இந்தி, மராத்தியைச் சேர்ந்த தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்ஸ் பலர் நடிக்கின்றனர்.

* லாக்டவுன் நேரத்தில் ஹைதராபாத்தில் அஜித் சிக்கிவிட்டார்… அங்கிருந்து சென்னைக்கு அவர் பைக்கிலேயே திரும்பினார்… என்று வந்த செய்திகளில் உண்மை இல்லையாம். லாக் டவுனுக்கு முன்னரே அந்த ஷெட்யூலுக்கான அஜித் போர்ஷன் முடிந்துவிட்டது என்பதால், அவர் சென்னைக்குத் திரும்பிவிட்டார். இதன் பிறகு இரண்டு வாரங்கள் கழித்தே லாக்டவுன் ஆரம்பித்தது.

* ஹைதராபாத்தில் ஷூட் நடக்கும் போதே அடுத்த ஷெட்யூலுக்காக செட் அமைக்கும் பணி தொடங்கிவிட்டது. லாக் டவுனால் அந்த செட் இன்னும் முற்றுப்பெறவில்லை. ஊரடங்கு முடிந்தபிறகு மீண்டும் செட் அமைக்கும் பணி தொடரும்.

* இதுவரை ஒருசில சீன்ஸும் ஆக்‌ஷன் பிளாக்கில் சிலவும் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளன. இன்னும் பெரும்பாலான சீன்ஸ் எடுக்க வேண்டியுள்ளன. தியேட்டரையே அதிர வைக்கப்போகும் இன்னும் சில ஆக்‌ஷன் சீக்குவென்ஸும் இருக்கின்றன. தவிர பாடல் காட்சிகளும் இன்னும் படமாக்கப்படவில்லை.

‘அவசரம் வேண்டாம்… கொரோனா பிரச்னை முடியட்டும்… ஒவ்வொரு தொழிலாளரின் நலனும் நமக்கு முக்கியம். அதனால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாதபடி பிறகு படப்பிடிப்பைத் தொடரலாம்… பட ஷூட் முடிஞ்சபிறகு ரிலீஸ் தேதியை முடிவு செய்யலாம்…’ என அஜித் சொல்லிவிட்டார்!

அஜித்தின் இன்வால்வ்மெண்ட்டையும்… அஜித் ரசிகர்கள் விரும்பும் பிரமாண்ட ஓப்பனிங்கையும், ஃபேமிலி ஆடியன்ஸையும் இழுக்கும் வகையில் பக்காவாக பேக்கேஜ் செய்யப்பட்டிருக்கும் ஆக்‌ஷன் என்டர்டெயின்மென்ட் ஸ்கிரிப்ட்டும் பொட்டில் அறைவது போல் ஒரு விஷயத்தை உணர்த்துகின்றன…

யெஸ், 2020 இறுதி அல்லது 2021ல் ‘வலிமை’, இந்திய சினிமாவுக்கே வலிமை சேர்க்கும்! விநியோகஸ்தர்களையும் திரையரங்க உரிமையாளர்களையும் கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டிருக்கும் இழப்பிலிருந்து விடுவிக்கும்!

Published on Kungumam weekly magazine dated June 5 , 2020.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here