அஜித் கற்றுத் தருகிறார்… உலக சாதனை நிகழ்த்துகிறோம்!
பெருமைப்படும் எம்.ஐ.டி. கல்லூரி மாணவர்கள்
அஜித்தைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? நடிகர், பைக் / கார் ரேசர்… இத்யாதி… இத்யாதி..? நாம் அறிந்த அஜித்தை விட ஒருபடி மேலாகவே சென்னை எம்.ஐ.டி. கல்லூரி அறிந்திருக்கிறது. அதனாலேயே தங்கள் கல்லூரியின் விமானத்துறை ஆலோசகராக அவரை நியமித்திருக்கின்றனர்! “சாதாரணமாக விமானம் பறக்க நீளமான ஓடுதளம் வேண்டும். ஹெலிகாப்டருக்கு குறிப்பிட்ட சுற்றளவில் ஹெலிபேட் தயார் செய்ய வேண்டும். ஆனால், நாங்கள் கண்டுபிடித்திருக்கும் ஆளில்லா விமானத்துக்கு இவை எதுவும் அவசியமில்லை.
அதிகப்படியான றெக்கைகளைக் கொண்ட மல்டி ரேடார் விமான வகையைச் சேர்ந்தது இது. விமானத்துறையில் அடுத்தகட்ட முன்னேற்றம் இதுவாகத் தான் இருக்கும். உலக நாடுகளும் இந்த வகை கண்டுபிடிப்பில்தான் அதிகமாக கவனம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில் நாம் பெருமளவு முன்னேறியுள்ளோம்…’’ என்கிறார் துறை சார்ந்த விஞ்ஞானியும் விரிவுரையாளருமான வசந்த்.
இவர் பெருமைப்படுவதில் அர்த்தமிருக்கிறது. ஏனெனில் அஜித் தலைமையிலான மாணவர்கள் குழு உருவாக்கியிருக்கும் ட்ரோன்தான் இப்போது இந்திய அளவில் 111 பொறியியல் கல்லூரிகளுக்கிடையே நடந்த போட்டியில் முதல் பரிசும், தொடர்ந்து உலகளவில் பல சாதனைகளையும் படைத்து வருகிறது. ‘தக்ஷா’ என்னும் பெயரில் அப்துல் கலாம் உருவாக்கிய மாணவர் குழுதான் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஆளில்லா விமானம் (Unmanned Aerial Vehicles (UAVs) செய்வதில் இந்த ‘தக்ஷா’ குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
“கார், விமானம், மருத்துவப் பொருட்கள், செல்போன்… என உலகளவில் கண்டுபிடிக்கப்பட்ட பல பொருட்களை அந்தந்த நாட்டு ராணுவம்தான் முதலில் பயன்படுத்தியது. பிறகுதான் இவை மக்கள் பயன்பாட்டுக்கு வந்தன. அப்துல் கலாம் எங்கள் கல்லூரியில் பேராசிரியராக இருந்தபோது ‘இனி நாம் கண்டு பிடிக்கக்கூடிய எந்தக் கருவியும் நேரடியாக மக்கள் உபயோகத்துக்குச் செல்ல வேண்டும். அப்படிப்பட்ட ஆராய்ச்சியில்தான் நாம் அக்கறை காட்ட வேண்டும்…’ என அடிக்கடி சொல்வார்.
இதைக் கருத்தில் கொண்டு கடந்த பதினைந்து வருடங்களாக ஆண்டுதோறும் அந்தந்த வருட மாணவர்கள் முயற்சி செய்துகொண்டே வந்தனர். ஒவ்வொரு படியாகக் கடந்து இப்போது மாணவர்கள் சாதித்திருக்கிறார்கள்…’’ என்கிறார் எம்.ஐ.டி. விமானத்துறை பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார். சமீபத்தில் நடந்த போட்டி யில் இந்த ‘தக்ஷா’ ட்ரோன் 6 மணி 47 நிமிடங்கள் வானில் பறந்தது. இதன் மூலம் உலகிலேயே அதிக நேரம் பறக்கக்கூடிய ட்ரோன் என்ற புதிய சாதனையை நிகழ்த்தி கின்னஸில் இடம்பிடித்துள்ளது. இதற்கு முன்பு 2 மணி 40 நிமிடங்கள் வானில் பறந்த அமெரிக்கர்களின் ட்ரோன் கண்டுபிடிப்புதான் சாதனையாக இருந்தது.
எம்.ஐ.டி. மாணவர்கள் கண்டுபிடித்திருக்கும் ட்ரோனின் சிறப்பு, அது பெட்ரோலைப் பயன்படுத்தி இயங்கும் என்பதுதான். அதாவது, பெட்ரோல் மூலம் கிடைக்கும் எரிசக்தியை மின்சக்தியாக மாற்றி அதிக நேரம் இயங்குகிறது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ட்ரோன்கள் அனைத்தும் பேட்டரியில் இயங்கக் கூடியவை; ரிமோட் மூலம் ஆபரேட் செய்யப்படக் கூடியவை என்பதை இங்கு கவனத்தில் கொள்வது நல்லது. போலவே, எம்.ஐ.டி. மாணவர்கள் கண்டுபிடித்திருக்கும் ட்ரோனை கணினி வழியாக இயக்க முடியும் என்பதால் எந்த இடத்தில் எவ்வளவு உயரம் பறக்க வேண்டும் என்பதை கம்ப்யூட்டரைப் பார்த்தே கணிக்க முடியும்.
இதன் மிகப்பெரிய ப்ளஸ், விபத்து போன்ற பேரிடரில் ஆட்கள் சிக்கிக்கொள்ளும்போது இந்த ட்ரோன் வானில் பறந்து உடனுக்குடன் புகைப்படம் எடுத்து தன்னுடன் இணைக்கப்பட்டிருக்கும் கம்ப்யூட்டருக்கு அனுப்பிவிடும். இதனால் ஆட்கள் எங்கு சிக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து, அதற்கேற்ப திட்டமிட்டு அவர்களைக் காப்பாற்ற முடியும்.
“இந்த விமானத்தை ஆட்டோமொபைல் மல்டி ரேடார் ஹெலிகாப்டர் முறையில் வடிவமைத்திருக்கிறோம். சிறிய ரக விமானத்தை குறைந்த நேரத்தில் பிரித்து கச்சிதமாக மீண்டும் ஒன்று சேர்க்கும் அளவு திறமை வாய்ந்தவர் அஜித்குமார். வடிவமைப்பு சார்ந்தும் குறைந்த அளவு எரிபொருளைக் கொண்டு நீண்ட நேரம் எஞ்சின் இயங்க என்ன செய்ய வேண்டும் என்பதை உள்ளிட்டும் பல பயனுள்ள குறிப்புகளை அவர் தந்தார். எல்லாமே பிராக்டிக்கலானவை…’’ பரவசத்துடன் சொல்கிறார் மாணவரான முகமது ரஸீப் “சிறிய ரக ஆளில்லா விமானத்தைப் பறக்கவிடும்போது அதன் வேகத்தை டியூனிங் செய்வது சிரமம். ஒவ்வொரு றெக்கையையும் கவனமாக கன்ட்ரோல் செய்து இலக்கு நோக்கி பறக்க வைக்க வேண்டும்.
இதற்கான டிப்ஸை அஜித் கொடுத்தார். அவர் கலந்து கொண்ட வெளிநாட்டுப் போட்டிகள் குறித்தும் அவர் பார்த்த / கேட்ட விஷயங்களையும் மனம் திறந்து பகிர்ந்துகொண்டார். தானொரு பிரபலமான நடிகர் என்ற பந்தாவை எங்களிடம் அவர் காட்டியதே இல்லை. சக மாணவராகவே எங்களிடம் நடந்து கொண்டார். ஜாலியாகப் பேசுவார். எங்களுக்கு சமமாக மண்தரையில் அமர்ந்து விமானம் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவார்.
நாங்கள் வடிவமைத்த விமானத்தில் எரிபொருள் தீர்ந்து ரிசர்வுக்கு வந்தபிறகு தடுமாறாமல் இருக்க அதன் அருகில் சின்னதாக துணை எரிபொருள் டேங்கை வைக்க ஐடியா கொடுத்தார். இதனால் இன்னும் கூடுதல் நேரம் விமானம் வானில் பறக்க முடிந்தது…’’ என அஜித் குறித்து வியக்கிறார் மற்றொரு மாணவரான அருள்குமார். ‘‘பதினைந்து வருடங்களுக்கு முன் சிறிய விமானங்களை அவர் கையாண்டபோது சின்னதாக ஸ்க்ரூ, போல்ட் காணாமல் போனாலோ அல்லது விமானத்தின் பாகம் ஏதாவது சேதமானாலோ உள்ளூரில் ஸ்பேர் பார்ட்ஸ் கிடைக்காதாம். அதை வெளிநாட்டில் ஆர்டர் செய்துதான் வரவழைக்க வேண்டுமாம். ‘இப்போது நீங்களே உதிரிப் பாகங்களைத் தயாரித்து பயன்படுத்துவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது…’ என்றார் அஜித்.
அப்போதுதான் எத்தனைப் பேர் எத்தனை ஆண்டுகளாக சிறுகச் சிறுக உழைத்து, சின்னச் சின்னதாகக் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தி அவற்றையெல்லாம் தொகுப்பாக எங்களிடம் கொடுத்திருக்கிறார்கள் என்று புரிந்தது. உண்மையில் எங்கள் முன்னோடிகளின் தோளில் அமர்ந்து உலகைப் பார்க்கும் குழந்தைகள்தான் நாங்கள்…’’ என நெகிழ்கிறார் முகமது ரஸீப். இந்த ஆளில்லா விமானம் மூலம் 20 கிலோ பொருட்களை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்ல முடியும்.
இப்போது இந்த ஆளில்லா விமானத்தை இயக்கி மருத்துவ உதவிகளை மேற்கொள்ள முடியுமா… விபத்தில் சிக்கியவரை இந்த விமானமே எவர் உதவியுமின்றி தூக்கி வருமா… அதற்கு என்ன மாற்றம் செய்ய வேண்டும்… என்பதைக் குறித்து மாணவர்களும், பேராசிரியர்களும், அஜித்தும் ஆலோசித்து வருகின்றனர். அது தொடர்பான ஆராய்ச்சியிலும் இறங்கியிருக்கின்றனர். எம்.ஐ.டி. கேம்பஸ் முழுக்க பேசப்படும் விஷயம் ஒன்றே ஒன்றுதான். அது, ‘‘படிப்பு, டெக்னாலஜி, புதிய புதிய கண்டுபிடிப்புகள் என்றுதான் அஜித் எங்களுடன் பேசுவாரே தவிர தன்னைப் பற்றியோ, தான் நடிக்கும் படங்கள் குறித்தோ எதுவுமே பேசமாட்டார். ‘என்னை முன்னிலைப்படுத்தாதீர்கள். உங்களை, உங்கள் கண்டுபிடிப்பு களை முதன்மைப்படுத்துங்கள்’ என்றுதான் எப்போதும் சொல்வார். ஆளில்லா விமானத் தயாரிப்பில் அவருக்கு இருக்கும் அறிவு சர்வதேச பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கு இணையானது!’’
Published on Kungumam Magazine dated July 27 , 2018