Action Ajith is Ready ! | Kungumam – June 6 , 2016

63569

Read  “Action AJITH Ready”  Article published at Kungumam weekly Magazine dated June 6 , 2016.

எக்ஸ்க்ளூசிவ் ஸ்டோரி

கால் மூட்டு ஆபரேஷனுக்குப் பிறகு அஜித் இன்னமும் ஏன் அடுத்த பட அறிவிப்பை வெளியிடவில்லை? பிறந்த நாளை எங்கே கொண்டாடினார்? ‘தல-57’ எப்போது ஆரம்பிக்கும்? அதை  இயக்கப் போவது சிவாவா? ஏ.ஆர்.முருகதாஸா? ஓட்டு போட லண்டனில் இருந்து வந்திருந்தாரா அஜித்? அல்லது தேர்தலுக்குப் பிறகுதான் லண்டன் பறந்தாரா? என கோலிவுட் முழுக்க சுழன்றடிக்குது அஜித் கேள்விகள். அஜித் தரப்பில் இதுபற்றி சொல்வதெல்லாம் ஹேப்பி நியூஸ்!

 fact-1
ஒன்றல்ல… மூன்று ஆபரேஷன்!

‘‘ ‘ஆரம்ப’த்தில் ஆரம்பித்த கால் மூட்டு வலி ‘வேதாளம்’ வரை தொடர் வலியாக நீடித்ததும், கால் மூட்டு ஆபரேஷன் செய்துகொண்டு அஜித் வீடு திரும்பியதும் தெரிந்த கதைதான். ஆனால், ‘ஒரு காலில்தான் வலி. அதில் மட்டும் ஆபரேஷன் பண்ணிக்கொண்டால் போதும்’ என அஜித்திலிருந்து மருத்துவர்கள் உள்பட பலரும் முதலில் நினைத்தார்கள். பரிசோதனைக்குப் பிறகுதான் தெரிய வந்திருக்கிறது, இரண்டு கால் மூட்டுகள், தோள்பட்டை என மூன்று இடங்களிலும் ஆபரேஷன் கட்டாயம் செய்ய வேண்டும் என்பது.

அஜித்தின் கிரீன் சிக்னலுக்குப் பிறகு மூன்று ஆபரேஷன்களையும் ஒரே நேரத்தில் முடித்திருக்கிறார்கள். சாயங்காலம் தொடங்கிய ஆபரேஷன், நள்ளிரவு  மூன்று மணி வரை நீடித்திருக்கிறது. ‘‘நீங்க நாலு நாளாவது ஐ.சி.யூவில் இருக்கணும்.. கம்ப்ளீட் ரெஸ்ட் தேவை’’ என டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், ‘‘இங்கிருந்தால் தகவல் கேள்விப்பட்டு ரசிகர்கள் வந்துவிடுவார்கள். மற்ற பேஷன்ட்டுகளுக்கு அது தொந்தரவாகிவிடும்!’’ என அஜித் சொல்லிவிட்டார்.

விடியற்காலைக்குள்ளாகவே ரசிகர்கள் சிலர் நலம் விசாரிக்க வந்துவிட்டார்கள். ‘கூட்டம் அதிகரித்துவிடக்கூடாதே’ என காலை ஏழு மணிக்கே ஆஸ்பத்திரியிலிருந்து புறப்பட்டுச் சென்றிருக்கிறார் அஜித். அதன் பிறகு வீட்டில் ஓய்வு, சின்னச் சின்ன பிசியோதெரபி பயிற்சிகள் என டாக்டர்கள் அறிவுறுத்தியதை ஸ்ட்ரிக்ட்டாகக் கடைப்பிடித்து, மீண்டும் நிமிர்ந்துவிட்டார் தல.

fact-2
அஜித் லண்டன் செல்லவில்லை. சென்றது எங்கே?

‘சிகிச்சைக்குப் பிறகு அஜித் லண்டன் சென்றுவிட்டார். அங்கே உயர் மருத்துவ சிகிச்சையைத் தொடர்கிறார். இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்காக லண்டனில் இருந்து அஜித் பறந்து வந்திருக்கிறார். தேர்தல் முடிந்ததும், மீண்டும் குடும்பத்தினருடன் லண்டன் புறப்படுகிறார்’ என அஜித்தைப் பற்றி கரை புரண்டோடிய செய்திகள் எதிலும் உண்மை இல்லை.

வீட்டில் ஓய்வில் இருந்த அஜித், மகள் அனோஸ்காவை ஸ்கூலுக்கு கொண்டு விடுவதும், மாலை திரும்ப அழைத்து வருவதுமாக இருந்தார். அனோஸ்காவிற்கு சம்மர் ஹாலிடேஸ் விட, ஷாம்லிக்கும் படப்பிடிப்பு பிரேக்குகள் கிடைக்க, அப்போதுதான் ஃபேமிலி டூர் பற்றி பேச்சு வந்திருக்கிறது. அஜித் தன் குடும்பத்தினரோடு பாஸ்போர்ட் அலுவலகம் வந்தது, பாஸ்போர்ட்  வாங்கியது எல்லாம் உண்மைதான். ஆனால், அவர் லண்டன் பறக்கவில்லை.

அஜித்தின் மிக நெருங்கிய நண்பர் ஒருவர் கோவாவில் இருக்கிறார். ‘‘இந்த சம்மருக்கு கோவா வந்துடுங்க. என் ஃபார்ம் ஹவுஸிலேயே கோடையைக் கொண்டாடுங்க. உங்க ஓய்விற்கு சிறந்த இடமா இருக்கும்!’’ என அவர் அழைப்பு விடுத்தார். நண்பரின் அன்பு வேண்டுகோளை ஏற்று குடும்பத்துடன் கோவா சென்று வந்திருக்கிறார்கள்.

fact-3
ஜூலையில் கொண்டாட்டம்!

சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் அஜித்தின் கண் புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். ‘அஜித்தின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கப் போகிறார். அதற்கு முன்னோட்டம்தான் அந்தப் புகைப்படம்!’ என வலைத்தளத்தில் பேச்சு தடதடக்கிறது. தமிழ் ‘மௌனகுரு’வை இந்தியில் சோனாக்‌ஷி சின்ஹாவை வைத்து ‘அகிரா’வாக இயக்கி முடித்துவிட்டார் முருகதாஸ். அடுத்து தமிழ், தெலுங்கு என இரு மொழியில் மகேஷ்பாபுவை இயக்கப்போகிறார்.

அஜித்துக்கான கதையை ஏ.ஆர்.முருகதாஸ் எப்போதோ தயார் செய்து ரெடியாக வைத்திருக்கிறார் என்பது ‘கத்தி’ படத்திலிருந்து ரவுண்ட் அடிக்கும் செய்தி. ஆனால், அஜித் இப்போது ‘வேதாளம்’ சிவா சொன்ன கதைக்கு ஹோம் வொர்க்கைத் தொடங்கிவிட்டார். ஃபேமிலி சென்டிமென்ட் ப்ளஸ் ஆக்‌ஷன் கலந்த சிவாவின் ஃபார்முலாதான் என்றாலும், இந்தப் படத்தில் நிறைய சஸ்பென்ஸ்கள் இருக்கின்றனவாம். ‘வேதாளம்’ படப்பிடிப்பு சமயமே அஜித்திடம் கதை சொல்லி ஓகே வாங்கிவிட்டார் சிவா.

சில மாதங்கள் கழித்து அவரே அஜித்திடம், ‘‘சென்டிமென்ட், காமெடி அதிகம் பண்ணிடலாம். ஆக்‌ஷனை வேணும்னா கம்மி பண்ணிக்குவோம்!’’ என ஆபரேஷனைக் கருத்தில் கொண்டு சொல்லியிருக்கிறார். ‘‘கதையில காம்ப்ரமைஸ் பண்ண வேணாம். என் ரசிகர்களுக்காக ரிஸ்க் எடுக்கறது தப்பில்ல!’’ என நம்பிக்கை கொடுத்திருக்கிறார் அஜித். அனிருத் இசையமைக்கப் போகிறார் என்ற தகவல் இன்னும் உறுதியாகவில்லை.

அவர் ‘ரெமோ’ உள்பட பல படங்களில் பிஸி. படத்தின் ஹீரோயினாக தமன்னாவை இயக்குநர் சிவா சிபாரிசு செய்கிறார் என்ற தகவலிலும் உண்மையில்லை. ‘என்னை அறிந்தால்’ படத்துக்குப் பிறகு அஜித் – அனுஷ்கா கூட்டணி இணையலாம். மற்றபடி சிவாவின் டெக்னீஷியன்கள் அப்படியே இதிலும் உண்டு. கிட்டத்தட்ட படப்பிடிப்புக்கு ரெடியாகிவிட்டார் அஜித். ஜூலையில் ஷூட்டிங் தொடங்கலாம் என்கிறார்கள். வரும் பொங்கலும் தல பொங்கல்தான்!

– மை.பாரதிராஜா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here