சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க சந்தானத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
‘வீரம்’, ‘வேதாளம்’ படக் கூட்டணியான அஜித் – சிவா இருவரும் மீண்டும் இணைந்து படம் பண்ண இருக்கிறார்கள். சத்யஜோதி நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது. அனிருத் இசையமைக்க இருக்கும் இப்படத்துக்கு வெற்றி ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இப்படத்துக்காக அஜித்துடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. காமெடி வேடத்தில் நடிக்கவிருப்பவர் யார் என்று கேள்வி எழுந்தபோது, சந்தானம் நடித்தால் நன்றாக இருக்கும் என்று படக்குழு கருதியிருக்கிறது. “நன்றாக இருக்கும். நீங்கள் கேட்கிறீங்களா.. நான் கேட்கட்டுமா” என்று கேட்டிருக்கிறார் அஜித்.
தற்போது நாயகனாக நடிக்க பல படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார் சந்தானம். தற்போது ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இயக்குநர் சிவாவும் சந்தானத்திடம் பேசியிருக்கிறார்.
அஜித் படம் என்பதால் காமெடியனாக நடிக்கலாம் என்று முடிவு செய்திருப்பதாக சந்தானத்துக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் முதல் தொடங்கவுள்ளது.
Source : Tamil Hindu , Published on May 9, 2016 .