நடிகர் அஜித் ஆந்திர மாநிலத்தின் தலைநகரமான ஐதராபாத்தில், பாலக்காடு சுப்ரமணிய அய்யருக்கும் சிந்தி சமூகத்ததை சேர்ந்த மோகினிக்கும் இரண்டாவது மகனாக மே மாதம் 1 ஆம் தேதி, 1971 ஆம் ஆண்டில் பிறந்தார். ஐதராபாத்தில் பிறந்திருந்தாலும், சென்னையில் வளர்ந்தார். ஆயிரம் விளக்கு ஆசான் மெமோரியல் உயர்நிலைப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பைத் தொடங்கியவருக்கு படிப்பில் ஆர்வம் இல்லை. ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என மனது ஓடியது. யாரும் செய்யாத ஒன்றைச் செய்து சாதிக்க வேண்டும் என்கிற வெறிதான் இருந்தது.
தனது பள்ளிப்படிப்பைப் பாதியிலே கைவிட்ட அவர் பைக் மெக்கானிக்காகப் பணியில் சேர்ந்தார். பைக், கார் ஓட்டுவதில் அதிக ஆர்வம் காட்டிய அவர், தானாகவே அவற்றை ஓட்ட கற்றுக்கொண்டு, அதற்கான உரிமத்தையும் பெற்றார். பைக் பந்தயம் தான் தொழில் என்று தேர்ந்தெடுத்தார், அதில் கலந்து கொள்ளப் பணம் வேண்டுமென்பதால், நண்பர்களின் யோசனைப்படி ரிச் பாயாக மாறினார். அஜித்தின் வசீகர தோற்றமும், வித்தியாசமான குரலும் அவரை மீடியாவின் பக்கம் இழுத்தது. மாடலிங், விளம்பர படம், என்று திரிந்த அவரை திரையுலகம் சுண்டி இழுத்தது. தூர்தர்ஷனில் ஒளிபரப்பான துண்டு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு பைக் ரேஸில் ஈடுபட்டு வந்தார். ஒரு கட்டத்தில் பைக் ரேஸா, சினிமாவா என்ற கேள்வி வந்தபோது சினிமா என்று தீர்மானித்தார்.
1991ல், தனது 20 வது வயதில், தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமான அஜித் , அப்படத்தின் இயக்குனர் மரணமடைந்ததால், அதில் நடிக்கும் வாய்ப்பு நழுவியது. பின்னர், 1992ல் பிரேம புஸ்தகம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். அப்படம் அவருக்கு சிறந்த புதுமுகத்திற்கான விருதைப் பெற்றுத்தந்தது. அதே ஆண்டில், செல்வா இயக்கத்தில், அமராவதி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதுவே, தமிழ்த் திரையுலகில் அவரது முதல் படமாகும். அஜித்தின் சினிமா பயணம் தொடர்ந்தது. 1995ல் வெளிவந்த ஆசை அவருக்குப் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
அதன் பிறகான அவரது திரைப்ப பயணத்தில் வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வந்தது. சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்தது, பைக் ரேஸில் கலந்து கொண்டு நேர்ந்த விபத்து உட்பட உடல் முழுவதும் 23 இடத்தில் ஆபரேஷன் நடந்தது. சிகிச்சைக்காக ஓய்வு பெற்றபோது உடல் எடை கூடியது. இனி அஜித் அவ்வளவுதான் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் ஒரு ஆண்டு இடைவெளியில் உடல் எடை குறைத்து ஒல்லிப்பிச்சானாக திருப்பதி படத்திற்கு வந்து நின்றபோது எல்லோரும் அதிசயமாக பார்த்தார்கள்.
சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வந்து அசத்தியவரும் அஜித் தான். வீட்டை மறந்து உழைப்பை மறந்து எதிர்காலத்தை மறந்து போஸ்டர் ஒட்டுவதிலும், பேனர் வைப்பதிலும் ஆர்வம் காட்டி ரசிகர் மன்றம் என்ற போர்வையில் திரியும் இளைஞர்களால் எதிர்காலம் பாழாகிவிடும் என தனது ரசிகர் மன்றத்தை கலைத்த ஒரே கலைஞன் அஜித். தன்னிடம் பணியாற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும் சொந்த வீடு கட்டிக் கொடுத்த ஒரே நடிகர் அஜித்.
* நடிகர் அஜித் எந்த ஒரு சமூக வலைதளங்களிலும் அவர் கிடையாது.
* அஜித் யாருக்கவது மொபைலில் பேச வேண்டும் என்று விரும்பினால், குட் டைம் டு கால் என்று அந்த நபருக்கு செய்தி அனுப்பிவிட்டு தான் போன் பேசுவார்.
* அஜித் முதலில் சென்னை, நந்தனத்தில் உள்ள ரெங்கா கார்மெண்ட்ஸில் தான் வேலை பார்த்துள்ளார்.
* அஜித் நடித்த கேரக்டரில் முகவரி ஸ்ரீதர் ரோல் அவருக்கு மிகவும் பிடித்தமான மறக்க முடியாத ரோல்.
* அஜித் இதுவரை மேக்-அப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தது கிடையாது.
* லிப்ட்டில் பெண்கள் யாராவது வந்தால் அவர்களுக்கு கதவை திறந்து விட்டு அவர்களை அனுப்பிய பிறகு தான் இவர் செல்வார்.
* ஷூட்டிங் இல்லாமல் சென்னையில் இருந்தால் குழந்தைகளை பள்ளியில் கொண்டு போய் விடுவதை விரும்பி செய்வார்.
* குழந்தைகளுக்காக பள்ளியில் நடக்கும் விழாவில் பொறுப்பான தந்தையாக தானும் கலந்து கொள்வார்.
* அம்மா வழி பாட்டியை பார்க்க அடிக்கடி கோல்கட்டாவிற்கு அஜித் செல்வது வழக்கம்.
* எந்த ஹோட்டல் போனாலும் அவர் சாப்பிட்ட உணவை சமைத்த செப்பை பார்த்து இதை எப்படி செய்தீர்கள் என்று கேட்டு தெரிந்து கொண்டு, அவரை பாராட்டி விட்டு அடுத்த நாளே அந்த உணவை தானும் வீட்டில் செய்து பார்ப்பார்.
* நேரம் கிடைக்கும் போதெல்லாம் குடும்பத்தார் எல்லாரையும் அவர் வீட்டில் உள்ள கார்டனுக்கு வரவைத்து ஏதேனும் சாப்பிட கொடுத்து அவர்களோடு பேசி மகிழ்வது அஜித் வழக்கம்.
* அஜித் வீட்டுக்கு பெரிய டீம் யாரும் பார்க்க வந்தால் டீ போட்டு எடுத்துவர சொல்லி, அத்தனை பேருக்கும் தன் கையால் அவர்களுக்கு கொடுப்பார்
* வெளிநாடுகளுக்கு சென்று படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் பைக் எடுத்து கொண்டு ஐந்நூறு கிலோ மீட்டர் வரை பயணம் செய்து வர அஜித்திற்கு மிகவும் பிடிக்கும். தற்போது விவேகம் படப்பிடிப்பில் கூட அதை தொடருகிறாராம்.
* அவர் விரும்பி சமைக்கும் போது யாருக்காவது அந்த உணவு பிடிக்கும் என்று அஜித் அறிந்தால், அவர் எப்போது சமைத்தாலும் அந்த உணவை அவர் வீட்டுக்கு அனுப்பி வைப்பார்.
* ஸ்ரீதேவி நடித்த இங்கிலீஷ் விங்க்லீஷ் படத்தில் ஒரு நம்பிக்கை தரும் ரோலில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று படக்குழு கேட்க, உடனே மும்பையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டவர், அதற்காக தங்கும் செலவு, போக்குவரத்து செலவு உட்பட எல்லாவற்றையும் தானே செய்து கொண்டார்.
* வீட்டிற்கு வந்து விட்டால் அந்த நேரம் குடும்பதினருக்குதான் என்பதால் வீட்டில் சினிமா பற்றி எந்த விஷயத்தையும் பேச மாட்டார்.
* வீட்டில் கேபிள் அல்லது மின்சாரம், கார் ரிப்பேர் இப்படி எதற்காவது ஆட்களை வர சொன்னால் முதலில் அவர்களிடம் லைசென்ஸ் இருக்கா என்று பார்த்து தான் வேலை செய்ய சொல்வார். அவர்களுக்கு தேவையான உதவிகளை இவரே எல்லாவற்றையும் எடுத்து கொடுப்பார்.
* அஜித்துக்கு ரொம்ப பிடித்த ஊர் லண்டன். எல்லா வீடும் ஒரே மாதிரி இருக்கும், அந்த ஊர் ரொம்ப டிசிப்ளின் என்பார்.
* நடு இரவில் காரில் பயணம் செய்து வந்தால், அந்த ரோட்டில் யாரும் இல்லை என்றாலும் கூட சிக்னலில் நின்று தான் செல்வார், போக்குவரத்து விதிகளை சரியாக பின்பற்றுபவர்.
* அஜித் வீட்டிற்கு மிக அருகில் ஒரு காமிரா வைக்கப்பட்டுள்ளது. இது எதற்காக என்று கேட்டால், அவரின் உதவியாளர்கள் பலர் ஹெல்மெட் போடாமல் பைக் ஒட்டி வருபவர்களை கண்காணிக்க தானாம்.
* என்னை அறிந்தால் படப்பிடிப்பு சமயத்தில் காலை முதல் மதியம் வரை அவருக்கான காட்சிகளை எடுக்கவில்லை. ஆனால் அஜித் எந்த கோபமும் அடையாமல் படப்பிடிப்புக்கு வந்தவர் ஏன் என் காட்சி எடுக்கவில்லை என்று ஒரு வார்த்தை கூட கேட்கவில்லையாம்.
* கிடைக்கும் நேரத்தில் நிறைய சுயசரிதை புத்தகங்கள் படிப்பது அஜித்துக்கு மிகவும் பிடிக்கும். அப்படி அவர் விரும்பி ரசித்து படித்தவை மண்டேலா சுய சரிதை, இன்றும் படித்து வருகிறார்.
* திருப்பதிக்கு நடைபாதையில் நடந்து சென்று சாமி கும்பிடுவது அஜித்துக்கு பிடித்த விஷயம். பாலக்காடு பக்கம் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு செல்வது வழக்கம், சென்னையில் சாய்பாபா கோயில் செல்வது வழக்கம்
* எவ்வளவு பிசியான நடிகராக இருந்தாலும் எளிமையாக வாழ ஆசைப்படுவார். அளவுக்கு மீறிய ஆசையை எப்போதும் இவர் விரும்புவதில்லை.
* இனி படத்தில் பஞ்ச் பேசி நடிக்க கூடாது என்ற முடிவில் இருக்கிறார். சால்ட் அண்ட் பெப்பர் லுக் தான், இனி வயசுக்கு ஏற்ற மாதிரி நடிக்கணும், என்று முடிவு செய்துள்ளதாக பேச்சு.
Published on Dailythanthi dated May 1 , 2017.