சென்னையில் நடைபெற்ற ஆளில்லா விமானம் பறக்கவிடும் போட்டியில், நடிகர் அஜித் பயிற்சி அளித்த குழு, சாதனை படைத்துள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும், நடிப்பைத் தவிர கார், பைக் ரேஸ்களில் தொடர்ந்து தனது கவனத்தைச் செலுத்தி வருகிறார் நடிகர் அஜித். கார், பைக்கைத் தாண்டி, ஏரோ மாடலிங் துறையிலும் தற்போது தனது கவனத்தைத் திருப்பியுள்ளார்.
இதற்காக, குரோம்பேட்டையிலுள்ள எம்.ஐ.டி கல்லூரியின் ஏரோ மாடலிங் துறைக்கு விசிட் அடித்தார். இதுகுறித்த புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலாகிவந்தன. இந்த நிலையில்தான், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆளில்லா விமான சோதனை பைலட்டாகவும், அந்த அமைப்பின் ஆலோசகராகவும் அஜித் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து மாணவர்களுக்கான பயிற்சியையும், ஆலோசனைகளையும் வழங்கி வந்தார். செப்டம்பர் மாதம் குயின்ஸ்லாந்தில் நடைபெற உள்ள ஆளில்லா விமானம் தொடர்பான போட்டிகளில் எம்.ஐ.டி மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதற்கிடையே, அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று ஆளில்லா குட்டி விமானம் பறக்கவிடும் போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு குழுக்களுடன் அஜித் ஆலோசகராக உள்ள எம்.ஐ.டி மாணவர்கள் குழுவும் பங்கேற்றது. அதில், எம்.ஐ.டி மாணவர்கள் தயாரித்த ஆளில்லா குட்டி விமானம் பறக்கவிடப்பட்டது. அது, தரையில் இருந்து 10 முதல் 15 அடி உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டதுடன், அந்த விமானம் 6 மணி நேரம் 7 நிமிடம் 45 விநாடிகள் வரை பறந்தது. இதன்மூலம், அதிக நேரம் வானில் பறந்த சாதனையை அஜித் குழு படைத்தது. இதை, கின்னஸ் சாதனைக்குப் பரிந்துரைக்க உள்ளதாக போட்டி ஏற்பாட்டார்கள் தெரிவித்தனர்.
Published on Vikatan Web Portal dated July 13 , 2018