Ajith’s Name is AK in Vivegam – Director Siva’s Exclusive interview at Vikatan

1886

Read Ajith’s Name is AK in Vivegam – Director Siva’s Exclusive interview , article published on Vikatan Website on July 6 , 2017 .

“அஜித் சார்க்கு ‘ஆரம்பம்’ ஷூட்டிங்கில் ஒரு ஆக்சிடன்ட். அப்ப அடிபட்ட இடத்திலேயே ‘வேதாளம்’ல ‘ஆலுமா டோலுமா’ பாடல் ஷூட்டில் அடிபட்டு காலே திரும்பிடுச்சு. டாக்டர்கள் ரொம்ப சிரமப்பட்டு அவரை பழைய நிலைமைக்கு கொண்டுவந்தாங்க. இப்படி அவருக்கு இதுவரை 20 ஆப்ரேஷன்கள் பண்ணியிருக்காங்க. இந்த சூழல்ல ‘விவேகம்’ பண்ண ஒப்புக்கிட்டது பெரிய விஷயம். அதுக்கு அவரோட தன்னம்பிக்கைதான் காரணம். அடுத்து கதை மேல் அவருக்கிருந்த நம்பிக்கை. ‘இந்தக் கதைக்காக கஷ்டப்படலாம்’னு முடிவெடுத்தார். காலையில நாலரைக்கு எழுந்தார்னா எட்டு மணிவரை எக்சசைஸ். டைம் கிடைச்சாக்கூட ரன்னிங் போயிடுவார். சாப்பாட்டை குறைச்சார். உடல் இறுகி, மெருகேறி அவ்வளவு அழகாக ஹேண்ட்சமா வந்து நின்னப்ப யூனிட்டே பார்த்து ஆச்சர்ப்பட்டுச்சு.’’ வார்த்தைக்கு வார்த்தை அஜித்தை வியக்கிறார் இயக்குநர் சிவா. விருகம்பாக்கம் ஜெமினி லேபில் ‘விவேக’த்தை எடிட் செய்துகொண்டு இருந்தவரை சந்தித்தேன். எடிட்டர் ரூபனிடம் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துவிட்டு நம்மிடம் பேசத் தொடங்கினார்.

விவேகம்

“ ‘ஏ.கே.’ ஆமாம், ‘விவேக’த்தில் இதுதான் அஜித் சாரின் கேரக்டர் பெயர். டீசர் பார்க்கும்போது ‘இதில் இவர் இன்டர்நேஷனல் ஏஜென்டா? இரண்டு கேரக்டர்களா அல்லது இரண்டு கெட்டப்களா? இப்படி நிறைய சந்தேகங்கள் இருக்கலாம். ஆனால் இதெல்லாம் படம் பார்த்துட்டு ஆடியன்ஸ் அடையவேண்டிய சந்தோஷங்கள். அந்த சந்தோஷத்தை அவங்களுக்கு நாம கொடுக்கணும். ‘விவேகம்’ மிகச்சிறந்த அனுபவமா இருக்கும் என்பதற்கு நான் கியாரன்ட்டி. ஒரு ரசிகனா அவரை எப்படியெல்லாம் பார்க்கணும்னு ஆசைப்பட்டேனோ என் படங்கள்ல அப்படியெல்லாம் அவரை மாற்றி பார்த்துட்டுவர்றேன்னு சொல்லலாம். அவருக்கு வேஷ்டி சட்டை போட்டு பார்க்கணும்னு ஆசைப்பட்டேன், அது ‘வீரம்’ல நடந்துச்சு. கொல்கத்தா, வடசென்னை பின்னணியில் அவரை காட்டணும்னு  நினைச்சேன். அது ‘வேதாளம்’ல அமைஞ்சுது. இப்ப இன்டர்நேஷனல் ஏஜென்டா ஸ்டைலிஷா அவரோட பாடி லாங்குவேஜுக்கு ஏத்தமாதிரி ஹெவி மாஸா ஒரு படம் பண்ணணும்னு ஆசைப்பட்டேன். இப்ப அதுவும் ‘விவேகம்’ல நடந்திருக்கு. இது அவரோட ஃபேன்ஸ், ஃபேமிலி ஆடியன்ஸ், குழந்தைகள்னு எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் மிகப்பெரிய ட்ரீட்னு சொல்லலாம். ஏன்னா சின்ன வயசுல இந்தமாதிரி ஏஜென்ட் படங்கள் நிறைய பார்த்திருப்போம். ஆனால் அதை நமக்கு தெரிஞ்ச பழக்கமான ஒருத்தர் பண்ணும்போது தியேட்டர்ல ரொம்ப பெரிய ரெஸ்பான்ஸ் இருக்கும்னு நம்புறேன்.”

விவேகம்

‘‘ஒரு படம் ஆரம்பிக்கும்போது அந்த டீமுடன் இருக்கும் நட்பு அது முடியும்போது இருக்காதுனு சொல்வாங்க. ஆனால் இது அஜித்துடன் உங்களுக்கு மூணாவது படம். உங்களுக்குள்ள கருத்துவேறுபாடு வந்ததே இல்லையா?’’

‘‘‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’… மூணையும் நான் தனித்தனி படங்களா பார்க்கலை. அஜித் சாருடன் நம்ம பயணம் ‘வீரத்’துல தொடங்கி தொடர்ந்து நடந்துட்டு இருக்கு. ‘வீரம்’ ஹிட்டானதால் ‘வேதாளம்’. அது ஹிட்டானதால் ‘விவேகம்’னு சொல்றதைவிட அஜித் சாருக்கு சினிமா மேல இருக்கக்கூடிய மரியாதையும் என் மேல, என் டீம் மேல, எங்க உழைப்பு மேல இருக்கக்கூடிய மரியாதையும் ஒவ்வொரு படத்துக்கும் கூடிட்டே இருக்கிறதால திரும்பத்திரும்பப் படங்கள் பண்றோம். சுருக்கமா சொன்னா சக்சஸ் கூடுறதால மட்டும் இந்த காம்போ கிடையாது. உழைப்பு மேல இருக்கிற மரியாதை கூடுறதாலனு சொல்லலாம்.’’

விவேகம்

‘‘97 சதவிகிதம் ஃபாரின் படப்பிடிப்பு. எப்படி இருந்துச்சு அந்த அனுபவம்?’’

“அஜித் சார் உள்பட எல்லாரும் குடும்பத்தை விட்டுட்டு போயிருந்தோம். 10 நாள் பிரிஞ்சு இருந்தாலே எனக்கு வீட்டு ஞாபகம் வந்துடும். குழந்தை, மனைவி, அம்மா எல்லாரையும் பார்க்கலைனா ரொம்ப கஷ்டமாயிடும். ஆனால் 70 நாள்கள் பிரிஞ்சு இருந்தது ரொம்ப கஷ்டமா இருந்தது. ஆனால், வெளிநாட்டில் ஷூட் பண்ணவேண்டிய கட்டாயம் இருந்தது. ஏன்னா… இது லவ் சப்ஜெக்ட் கிடையாது. ஆக்ஷன்ஸ், மக்கள் கூட்டம், எமோஷனல் செட்டப் நிறைய உள்ள ஸ்கிரிப்ட். வழக்கமா என் படங்களை 110 நாட்களுக்குள் முடிச்சிடுவேன். ஆனால் இந்தப்படம் 150 நாள்களுக்கு மேல் எடுத்துச்சு. ஷூட்டிங் ஹவர்ஸ் கம்மியானதுதான் இதுக்குக் காரணம். காலையில 9 மணிக்கு வர்ற லைட் சாயங்காலம் மூன்றரைக்கெல்லாம் போயிடும். தவிர மைனஸ் டிகிரியில ஷூட் பண்ணவேண்டிய சூழல். ராணுவ டேங்கர்கள், ஹெலிகாப்டர்கள், மிலிட்டரி வேகன்களை இதில் பயன்படுத்தியிருக்கோம். பிரமாண்டமான இன்டர்நேஷனல் லுக் கொடுக்கிறதை இப்ப பார்க்கும்போதுபட்ட கஷ்டத்துக்கு பலன் கிடைச்சிருக்குனு சந்தோஷமா இருக்கு. இவ்வளவு பெரிய ப்ராஜெக்டா இது நிகழ்ந்ததுக்கு முக்கியமான காரணம் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் சார். ஐரோப்பாவுல ராணுவ தளவாடங்கள்ல ஷூட் பண்றது எல்லாம் சாதாரண விஷயம் கிடையாது. ஆனால் தியாகராஜன் சார் டீமின் முயற்சியால் எல்லாம் நல்லபடியா நடந்துச்சு.’’

விவேகம்

‘‘முதல்முறையா காஜல் அகர்வால்அஜித் காம்பினேஷன். காஜல் எப்படி நடிச்சிருக்காங்க?’’

‘‘ ‘இது எனக்கு 47வது படம். இந்தமாதிரி ஒரு படம், கேரக்டர் நான் இதுவரை பண்ணினது இல்லை’னு காஜல் சொன்னாங்க. அவங்களை பிரசன்ட் பண்ணின விதமே வித்தியாசமா இருக்கும். அவங்க பயன்படுத்தியிருக்கிற காஸ்ட்யூம்ஸ், நகைகள்னு எல்லாமே யுனிக்கா டிசைன் பண்ணினோம். அவங்களுக்கு ஹோம்லியான மனைவி கேரக்டர். இது அவங்களுக்கு அவ்வளவு பாந்தமா பொருந்தியிருக்கு. அக்ஷராஹாசன் முக்கியமான கேரக்டர் பண்ணியிருக்காங்க. விவேக் ஓபராய் சார்க்கும் பவர்ஃபுல்லான கேரக்டர்.’’

விவேகம்

‘‘டெக்னீஷியன்களின் உழைப்பு முழுமையா தேவைப்படுற படம். உங்க டீம் பற்றி சொல்லுங்க?’’

‘‘சரியான களம் அமையும்போதுதான் ஒவ்வொருத்தரின் திறமை முழுமையா வெளிப்படும்னு நம்புறேன். அதுக்கு ‘விவேகம்’ ஓர் உதாரணம். டீசர் பார்த்த எல்லாருமே ‘ஆங்கிலப் பட தரத்தில் இருக்கு’னு சொன்னாங்க. அதுக்கு முழுக் காரணம் நம் டெக்னீஷியன்கள்தான். கேமராமேன் வெற்றி. என் எல்லாப் படங்களுக்கும் அவர்தான் கேமராமேன். இரண்டுபேரும் நிறைய டிஸ்கஷன், ஹோம் ஒர்க்னு கடுமையா உழைச்சு வேறொரு ஸ்கேல்ல இதை பிரசன்ட் பண்ணியிருக்கோம். எடிட்டர் ரூபன். வித்தியாசமான வேகமான எடிட்டிங். இரண்டரை மணிநேரம் வேறொரு உலகத்துக்கு உங்களை கூட்டிட்டு போறதுக்கான முயற்சி. ஏஜென்ட் படங்களுக்குண்டான த்ரில்லை கொண்டுவர நிறைய செட்டப் தேவைப்பட்டுச்சு. அதுக்கு நிறைய ரிசர்ச் பண்ணி அந்த செட்டப்களை பண்ணிக்கொடுத்தார் ஆர்ட் டைரக்டர் மிலன். ‘சிறுத்தை’ பண்ணின கணேஷும் ‘பாகுபலி’, ‘தெறி’ உள்பட பல படங்கள் பண்ணின கொலயோன் இருவரும் சேர்ந்து அக்ஷன் சீக்வென்ஸ்களை அமைச்சிருக்காங்க. ஒரு பன்ச் விழுந்தாக்கூட அது காரணகாரியத்தோட ஃபயரா இருக்கணும்னு நினைப்பேன். இதில் ஆக்ஷனுக்கு மூணு சாலிட் எபிசோட் இருந்துச்சு. கடுமையா உழைச்சு அந்த எபிசோட்களை லாக் பண்ணினோம். ஒவ்வொரு ஆக்ஷன் எபிசோடுமே, இதுவரை யாரும் பண்ணாத, பார்க்காத எபிசோட்களா இருக்கும். 2 மணி 20 நிமிஷம்னு மொத்த படமும் விறுவிறுனு ஒரு ரோலர் கோஸ்டர் அனுபவத்தை தர இந்த டீம்தான் காரணம்.’’

விவேகம்

‘‘ ‘வேதாளம்’ படத்தைத் தொடர்ந்து ‘விவேகம்’ படத்திலும் அனிருத் காம்பினேஷன். பாட்டெல்லாம் எப்படி வந்திருக்கு?’’

‘‘அனிருத் கடின உழைப்பாளி, ஹேப்பனிங் யங்ஸ்டர். யூத்தோட பல்ஸை பக்காவா தெரிஞ்சு வெச்சிருக்கார். எனக்கு அவரையும் அவருக்கு என்னையும் ரொம்பப் பிடிக்கும். எங்க ரிலேஷன்ஷிப் பலமா இருக்கு. தம்பி மாதிரி ஆகிட்டார். எனக்கு ஒரு தியேட்டர் ஃபுல்லா உள்ள ஆடியன்ஸுக்கு கதை சொல்றதும் அனி ஒருத்தருக்கு கதை சொல்றதும் ஒண்ணுதான். கதை சொல்லும்போதுதான் உட்கார்ந்திருக்கிற சின்ன சோஃபாவுக்குள்ளேயே துள்ளி குதிக்கிறது, டான்ஸ் ஆடுறதுனு ரசிகர்களோட ஃபுல் ரியாக்ஷனும் அவர் முகத்துலயே தெரிஞ்சுடும். இந்தக் கதையை சொல்லி முடிச்சதும் என்னை கட்டிப்பிடிச்சுகிட்டார். ‘இது வேற லெவல் சார்’னார். வீட்டுக்கு வந்தப்பிறகும்கூட போன் பண்ணி, ‘தாறுமாறு சார். அஜித் சார் இதை பண்ணிட்டாருன்னா வேற லெவல்ல இருக்கும்’னார். ஆமாம், அனியும் தல ஃபேன். ‘இந்த பிஜிஎம்க்கு, இந்த சாங்குக்கு தல நடந்து வந்தா, ஆடுனா, பேசுனா எப்படி இருக்கும்’னு சொல்லிட்டே இருப்பார். இந்த ஜானர் சினிமா அவருக்கு ரொம்ப்பிடிச்சுடுச்சு. அவர் எனர்ஜிக்கு ஓடுறது ரொம்ப சிரமம். ஓடலைனாலும் நம்மை இழுத்துட்டு போயிடுவார். நிறைய டிஸ்கஷ் பண்ணுவோம். அதுவும் நள்ளிரவு ஒருமணி வாக்கில்தான் அவர்ட்ட இருந்து போன் வரும். அதுவும் குறைந்தபட்சம் ஒருமணிநேரம் பேசுவார். அவரின் அந்த எனர்ஜிதான் ‘சர்வைவா’பாட்டோட வெற்றி. கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் தவிர இதில் நான் இரண்டு பாடல்களையும் எழுதியிருக்கேன். அதில் ஒண்ணு, நெவர் கிப்அப்ங்கிற கான்செப்ட்ல அருமையான சிச்சுவேஷன்ல அமைஞ்சிருக்கு. போராடுகிற மனிதனின் போராட்ட குணத்தைச் சொல்லக்கூடிய உத்வேகம் மிகுந்த பாடலா அது இருக்கும். ‘வேதாளம்’ல நான் எழுதின ஒரு தீம் சாங் அனிருத்துக்கு ரொம்ப பிடிச்ச பாடல். அதனால இதுலயும் எழுதுங்கனு சொன்னார். இந்தப்படத்துக்கு அனி மிகப்பெரிய சொத்து.’’

விவேகம்

‘‘ ‘சிறுத்தை’ தொடங்கி உங்க படங்கள்ல காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும். இதில் காமெடி எப்படி வந்திருக்கு?’’

‘‘இதுலயும் காமெடிக்கு ஸ்கோப் உள்ள நிறைய காட்சிகள் இருக்கு. இதில் கருணாகரன் வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த தமிழர் கேரக்டர்ல வர்றார். அவருக்கு காமெடி ரொம்ப இயல்பா வருது. அவரோட கேரக்டர் பேர் ‘ஆப்ஸ்’. அவருக்கும் அஜித் சாருக்குமான காம்பினேஷன்ல வர்ற ஃபன் படம் ஃபுல்லாவே இருக்கும்.’’

விவேகம்

‘‘அடுத்தபடம் சிவகார்த்திகேயனை இயக்குறீங்கனு ஒரு தகவல். உண்மையா?’’

‘‘ ‘இப்ப நாம பண்ணிட்டு இருக்கிற படத்தை முடிக்கிறவரை அடுத்த படத்துக்கு யார்கிட்டயும் அட்வான்ஸ் வாங்கக்கூடாது.’ ஆரம்பத்தில் இருந்தே இதை ஒரு பாலிஸியாவே வெச்சிருக்கேன். ஆமாம் ஒரு படம் பண்ணிட்டு இருக்கும்போது அடுத்த கதை பற்றியோ, அடுத்த ப்ராஜெக்ட் பற்றியோ யோசிக்கவேமாட்டேன். ஏன்னா சினிமா விளையாட்டு இல்லை. உண்மையா உழைக்கிறேன். மத்ததை கடவுள் பார்த்துப்பார். அவ்வளவுதான்.’’

‘‘ ‘எந்த பட்ஜெட்ல பண்ணினாலும் அதை திரும்ப எடுக்குறதுக்கான சோர்சஸ் சினிமாவில் இருக்கு’ என்பதை ‘பாகுபலி’ நிரூபிச்சிருக்கிறதை எப்படி பார்க்குறீங்க?’’

‘‘இந்த நம்பிக்கை எனக்கு ‘பாகுபலி’ வர்றதுக்கு முன்னாடி இருந்தே இருக்கு. சரியான உழைப்பை சரியான விதத்தில் பிரசன்ட் பண்ணினால் நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும். ஏன்னா மக்கள் நல்ல படங்களை தியேட்டருக்கு வந்து பார்க்க ரெடியா இருக்காங்க. இப்ப ‘பாகுபலி’ வந்தபிறகு அந்த நம்பிக்கை அதிகரிச்சு இருக்கு.’’

விவேகம்

‘‘எவ்வளவுதான் உழைச்சாலும் இந்தமாதிரி பெரிய பட்ஜெட்டை ஹேண்டில் பண்ணும்போது கண்டிப்பா மென்டல் பிரஷர் அதிகமா இருக்கும். எப்படி சமாளிக்கிறீங்க? வீட்டையும் சினிமாவையும் எப்படி பேலன்ஸ் பண்றீங்க?’’

‘‘நான் ரொம்ப சின்சியரா ஆத்மார்ததமா உழைச்சு பண்றதால இதை தைரியமா சொல்வேன், ஃபிலிம் மேக்கிங் ரொம்ப கஷ்டமான வேலை சார். ஆனா இதை நான் இஷ்டப்பட்டு சந்தோஷமா பண்றேன். என் கடுமையான உழைப்பு – கடவுள் அனுக்ரஹம்… இந்த காம்பினேஷன் இருக்கிறவரை கஷ்டம் வராது. ‘வேதாளம்’ படத்தை ஐந்தரை மாசத்துல எடுத்தோம். ஃபைனல் எடிட்டிங் அப்ப எடிட்டர் ரூபனும் நானும் 10 நாள் தூங்கலை. அவ்வளவு கடுமையா உழைச்சுதான் ‘வேதாளம்’ படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணினோம். ‘விவேக’மும் அப்படித்தான். திரைக்கரை எழுத அவவளவு சிரமப்பட்டேன். பல நாள் நைட் விடியவிடிய உட்கார்ந்து எழுதியிருக்கேன். கண் விழிச்சு படிக்கிற ஸ்கூல் பையனுக்கு அம்மா டீ போட்டு கொடுக்குறமாதிரி என் மனைவி இந்தப்பட இந்த ஸ்கிரிப்ட் மேக்கிங் சமயம் என்னை அப்படி கவனிச்சுகிட்டாங்க. குடும்ப சுமையை மனைவி எடுத்துக்கிட்டதாலதான் சினிமாவுல நம்மால் ரிலாக்ஸா ஒர்க் பண்ண முடியுது. அதனால சினிமாவையும் ஃபேமிலியையும் நான் இதுவரை பேலன்ஸ் பண்ணலைனுதான் சொல்லணும்.’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here