Ajith worked out 5 hours daily for Vivegam

1906

‘விவேகம்’ படத்துக்காக தினமும் 5 மணிநேரம் உடற்பயிற்சி செய்த அஜித் – தி இந்து
சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்துக்கு ‘விவேகம்’ என்று பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி யுள்ளது. இந்தப் படத்துக்காக தினமும் 5 மணிநேரம் உடற்பயிற்சி செய்து அஜித் தனது உடற்கட்டை மாற்றி யுள்ளார்.

‘வேதாளம்’ படத்தை தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஆகஸ்டு மாதம் தொடங்கியது. இதனை அடுத்து சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களிலும் படப்பிடிப்பு நடந்தது.

நடிப்புக்கு இடையே கார், பைக் பந்தயங்களில் கவனம் செலுத்திவந்த அஜித், கடந்த 2010-ம் ஆண்டில் மொராக்கோவில் நடைபெற்ற கார் பந்தயத்தில் கலந்துகொண்டபோது விபத்துக்கு உள்ளானார். இதனை அடுத்து நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கிய அஜித்துக்கு 2015-ம் ஆண்டில் ‘ஆரம்பம்’ படத்தின் சண்டைக்காட்சியின் போது மீண்டும் காலில் அடிப்பட்டது. மருத்துவர்கள் ஆலோசனையோடு படங்களில் நடிப்பதை தொடர்ந்த அஜித், உடலை, ஏற்றி குறைக்கும் கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தாமல் இருந்தார்.

இந்நிலையில் ‘விவேகம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படத்தில் அஜித்தின் உடற்கட்டு முழுமையாக மாறியுள்ளது. சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் அதில் அஜித் தோன்றுவது அவரது ரசிகர்களை மகிழ்வித்துள்ளது. இந்த படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ள நிலையில் இதில் கிராபிக்ஸ் கலந்திருக்குமோ என்ற சந்தேகத்தை சமூக வலைதளங்களில் சிலர் எழுப்பினர்.

இதுகுறித்து படக்குழு தரப்பில் விசாரித்தபோது அவர்கள் கூறிய தாவது:

இந்தக் கதையை தேர்வு செய்ததும் அஜித் தினசரி 5 மணி நேரம் உடற்பயிற்சி செய்து உடலை வலுவாக்குவதில் தீவிரம் காட்டினார். படத்தின் பெரும்பகுதி வெளிநாட்டு களத்தில் நடப்பதால் ஐரோப்பாவில் அவர் பல நாட்கள் தங்கியிருக்க வேண்டிய சூழல் உருவானது. அந்த நாட்களில் அதிகாலை 3 மணிக்கு எழுந்து உடற்பயிற்சியில் ஈடுபடுவார். அவருக்கு சென்னையைச் சேர்ந்த யூசுப் என்பவர் பயிற்சியாளராக இருந்து வருகிறார். படத்தின் 80 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீண்டும் ஐரோப்பாவில் இந்த மாதத்தில் படப்பிடிப்பை தொடங்க உள்ளோம். பாடல் இசை, பின்னணி இசை உள்ளிட்ட இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகின்றன. படத்தை ஜூன் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source : Tamil Hindu Dated Feb 3 , 2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here